அறுவர் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் கவனக்குறைவே காரணம்

heliஅம்னோ  எம்பி    ஜமாலுடின்   ஜர்ஜிசும்    மேலும்  ஐவரும்  ஹெலிகாப்டர்  விபத்தில்    பலியானதற்கு    அதன்   விமானியே   காரணம்    என்று   அந்த   விபத்து    தொடர்பான   இறுதி   அறிக்கை  கூறியது.

கடந்த    ஆண்டில்  பகாங்,   முவாட்ஸாம்  ஷா-வில்   கால்பந்து   திடலொன்றில்  ஹெலிகாப்டரை    அவசரமாக    தரைஇறக்கிய    கேப்டன்   கிளிப்பர்ட்  போர்னியர்,  அளவுக்கதிகமாக   எண்ணெய்  ஒழுகியதையும்  அதனால்   ஹெலிகாப்டரின்   மற்ற   பகுதிகளுக்கு   ஏற்பட்டிருக்கக்கூடிய    பாதிப்புகளையும்    சோதனை    செய்யத்   தவறி விட்டார்   என   மலேசிய   ஆகாய   விபத்து   புலனாய்வுப்  பிரிவு    வெளியிட்ட   117-பக்க    அறிக்கை கூறிற்று.

ஹெலிகாப்டரின்   தரைஇறங்கும்   பகுதி   பாதிக்கப்பட்டிருப்பதை    அறிந்தும்   போர்னியர்    ஹெலிகாப்டரை    சுபாங்    விமான   நிலையத்துக்கு    ஓட்டிச்செல்ல   முடிவு   செய்தார்.

“தாமதமின்றிப்  போக   வேண்டும்     என்று   பயணிகள்   வலியுறுத்தியதால்   அவர்   அப்படி  ஓட்டிச்  சென்றிருக்கலாம்”,  என்றும்   அது   தெரிவித்தது.

அந்த  ஹெலிகாப்டர்  விபத்து    கடந்த   ஆண்டு  ஏப்ரல்   4-இல்   சுங்கை  பெனிங்கில்   நிகழ்ந்தது.

ஜமாலுடினையும்   போர்னியரையும்   தவிர்த்து   பிரதமர்  நஜிப்    அப்துல்   ரசாக்கின்   பிரதான    தனிச்   செயலாளர்   அஸ்லின்   அலியாஸ்,  கெடா   தொழில்   அதிபர்   ரோபர்ட்   டான்,    மெய்க்காவலர்    ரஸ்கான்   செரன்,  அஜ்டியானா  பைஸியாரா   ஆகியோரும்   அதில்  பயணம்   செய்தனர்.