‘இசி பல இனத் தொகுதிகளை மலாய் தொகுதிகளாக மாற்றி அமைத்துள்ளது’

xavier1தேர்தல்    ஆணையம்  (இசி)       தேர்தல்   தொகுதிகளைத்   திருத்தி   அமைப்பதாகக்  கூறிக்கொண்டு    பல   இனங்கள்   கலந்திருந்த    தொகுதிகளை   ஒழித்துவிட்டு    அங்கெல்லாம்   மலாய்த்   தொகுதிகளை   உருவாக்கியிருப்பதாக   ஸ்ரீஅண்டாலாஸ்    சட்டமன்ற  உறுப்பினர்   சேவியர்   ஜெயகுமார்  குற்றஞ்சாட்டுகிறார்.

தமது  சட்டமன்றத்     தொகுதி   ஸ்ரீஅண்டாலாஸ்    அதற்கோர்    எடுத்துக்காட்டு    என   அந்த  பிகேஆர்    உதவித்   தலைவர்    கூறினார்.

“இங்கு  30,252  வாக்காளர்கள்     இடமாற்றம்   செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“அது  மட்டுமல்ல,  எஸ்பிஆர்   14,268   புதிய   வாக்காளர்களை   மலாய்க்காரர்  பகுதிகளிலிருந்து   கொண்டு  வந்துள்ளது.

“அதனால்  60க்கு40  (மலாய்அல்லாதார்- மலாய்க்காரர்)  என்று  ஒரு    கலப்பின   தொகுதியாக   இருந்தது   இன்று  85 விழுக்காடு   மலாய்க்காரர்களைப்    பெரும்பான்மையாகக்   கொண்ட  தொகுதியாக   மாறிவிட்டது”,  என  ஜெயகுமார்   நேற்று  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

இசி   ஆயிரக்கணக்கான   வாக்காளர்களை   இடமாற்றி    பல இனத்  தொகுதிகளின்    எண்ணிக்கையைக்   குறைந்திருக்கிறது.

“எப்படியோ,  சிலாங்கூரில்   மலாய்க்காரர்களைப்    பெரும்பான்மையாகக்  கொண்ட  தொகுதிகள்   அதிகம்   இருக்குமாறு   இசி   பார்த்துக்   கொண்டிருக்கிறது”,  என்றாரவர்.

தம்  தொகுதியின்   30,000   வாக்காளர்கள்   கோத்தா  ஆலம்  ஷா    சட்டமன்றத்  தொகுதிக்கு    மாற்றப்பட்டிருக்கிறார்கள்  என  ஜெயகுமார்     கூறினார்.

“ஸ்ரீமூடா   சட்டமன்றத்   தொகுதியிலிருந்தும்  கிள்ளான்   துறைமுக  தொகுதியிலிருந்தும்  மேலும்    11,010  வாக்காளர்களும்   கோத்தா   ஆலம்  ஷா   கொண்டு  செல்லப்பட்டிருக்கிறார்கள்.

“அந்த  வகையில்   கோத்தா  ஆலம்   ஷாவின்   பூர்விக  வாக்காளர்கள்   யாரும்  இப்போது   அங்கில்லை”.

இசி-இன்   தேர்தல்   தொகுதிகளைத்   திருத்தி    அமைக்கும்   நடவடிக்கை  “அருவருப்பை”த்   தருகிறது  என  ஜெயகுமார்   குறிப்பிட்டார்.