உலகளவில் மலேசியாவின் போட்டியிடும் திறன் ஏழு இடங்களுக்கு இறக்கம் கண்டிருப்பதற்கு 1எம்டிபிதான் காரணமே தவிர கூட்டரசு அமைச்சர் ஒங் கா சுவான் கூறிக்கொண்டிருப்பதுபோல் பொதுமக்களின் குறைகூறல் காரணமல்ல என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி கூறினார்.
உலகப் பொருளாதார அரங்கின்(WEF) 138 நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக போட்டியிடும் திறன் பட்டியலில் மலேசியா 18வது இடத்திலிருந்து 25வது இறக்கம் கண்டிருப்பது குறித்து ரபிசி இவ்வாறு கருத்துரைத்தார்.
“மிகப் பெரிய தேசிய குளறுபடியான 1எம்டிபி-யை அடுத்து மலேசியாவின் போட்டியிடும் திறன் குறைவது இயல்பே”, என்றாரவர்.
பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்ட பொதுப் பணம் திசைதிருப்பப்பட்டு 1எம்டிபி கடன்களைச் செலுத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது. அதன் விளைவாக பொதுக் கல்வி, சுகாதாரப் பராமரிப்புச் சேவையின் தரம் தாழ்ந்துள்ளது.
இவையெல்லாம் முதலீட்டாளர்களை விரட்டி அடிக்கும். அதன் தொடர் விளைவாக பொருளாதார வளர்ச்சி சுணக்கம் காணும், அரசாங்க வருமானம் குறையும், பட்ஜெட் ஒதுக்கீடுகளை மேலும் குறைக்க வேண்டிய நிலை உருவாகும் என்று ரபிசி கூறினார்.
அனைத்துலக, வாணிக, தொழில் அமைச்சின் இரண்டாவது துணை அமைச்சரான ஒங், நேற்று பெசுகையில் மலேசியாவின் போட்டியிடும் திறன் குறைந்ததற்கு மலேசியர்கள் ஓயாமல் குறைகூறிக் கொண்டிருப்பது ஒரு காரணம் என்று சொல்லியிருந்தார்.
உலகப் பொருளாதார அரங்கு( WEF) ஒரு நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் அந்நாட்டின் போட்டியிடும் திறனைக் கணிக்கிறது. அதன் கணிப்பில் 70 விழுக்காடு உள்நாட்டு மக்களின் கருத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கும் என ஒங் கூறினார்.