பேராக் பிகேஆர் செயலாளர் முகம்மட் அனுவார் ஜக்கரியா மூன்றாண்டுகளுக்குமுன், பேரணி நடத்துவது குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2013 மே 12 ஜாலான் மேடான் இஸ்தானாவில் உள்ள பிகேஆர் அலுவலகத்தில் கித்தா லவான் பேரணி நடத்தப்போவது குறித்து அவர் போலீசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பது அவர்மீதுள்ள குற்றச்சாட்டு.
பார்க்கப்போனால் இது ஒரு மறுகுற்றச்சாட்டு என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால், மே 2014-இல் அனுவார் இதே குற்றச்சாட்டுக்காக விடுவிக்கப்பட்டிருந்தார்.
2014 ஏப்ரலில் நிக் நஸ்மி நிக் அஹ்மட் வழக்கில்,, பிஏஏ-இன்படி 10 நாள் முன்கூட்டியே தெரியப்படுத்தாதற்காக விதிக்கப்படும் தண்டனை அரசமைப்புக்கு முரணானது என முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அனுவார் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் ஜோகூர் பிகேஆர் செயலாளர் ஆர். யுவனேஸ்வரன் வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் 10-நாள்களுக்கு முன்னதாகவே பேரணி குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பது அரசமைப்புப்படி சரியானதே, செல்லத்தக்கதே என்று தீர்ப்பளித்தது அனுவார்மீது மீண்டும் குற்றம் சாட்டப்பட வழிகோலியுள்ளது.