பெர்சே 5 பேரணியில் பங்கேற்கிறார் பாதிரியார்

 

Bisopwalksமலாக்கா மற்றும் ஜோகூர் கத்தோலிக்க மாவட்ட பாதிரியார் பெர்னட் பால் நவம்பர் 19 இல் நடைபெறவிருக்கும் பெர்சே பேரணி 5 இல் பங்கேற்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.

பெர்னட் பால் முகநூல் வழியாக மக்களை பெர்சே 5 பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுகொண்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இப்பாதிரியார் கடந்த ஆண்டு பினாங்கில் நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளார்.

‘நான் (பெர்சே 5 பேரணியில் கலந்துகொள்ள) திட்டமிட்டுள்ளேன். நான் செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்”, என்று பெர்னட் பால் மலேசியாகினியிடம் கூறினார்.

“நான் பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது தேவாலயங்களின் தலைவர் என்ற முறையில் நான் எனது மக்களுக்காகப் பேசுகிறேன்” என்று  என்று கூறிய பெர்னட் இவ்வாண்டு தொடக்கத்தில் வட்டாரப் பாதிரியாக நியமிக்கப்பட்டார்.

நாட்டை நேசிப்பதாக கூறும் அனைத்து மலேசியர்களும் நாட்டின் செல்வத்தை நேசிக்கும் தீய தலைவர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நாட்டை திரும்பப்பெற வேண்டும். நாம் பிறந்த நாட்டின் அமைதியைக் குலைக்க அவர்களை அனுமதிக்காதீர்கள் என்று அவர் தமது முகநூலின் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பெர்சே பேரணியில் பங்கேற்பது ஒரு குடிமகனின் உரிமை, கட்சி அரசியல் அல்ல, பிஎன்னை அல்லது எதிரணியை ஆதரிப்பது அல்ல.

“நவம்பர் 19 பேரணிக்குச் செல்லுங்கள்.

“தேவாலயம் பெர்சே தேர்தலை, பெர்சே அரசாங்கத்தை, பெர்சே பொது அமைப்புகளை மற்றும் பெர்சே செல்வப் பங்கீட்டை ஆதரிக்கிறது.

“வரலாற்றின் ஓர் அங்கமாக வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.