ஜோகூர், பத்துபகாட்சிலிருந்து மூவாருக்கு புறப்பட்ட பெர்சே 5 வாகன அணியை சிவப்புச் சட்டையினர் சிறிது நேரத்திற்கு தடுத்து நிறுத்தினர். இது முகநூலில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட வீடியோவிலிருந்து தெரிகிறது.
அந்தப் பதிவு ஒன்றில், “தயவு செய்து, திரும்பிப் போங்கள். இங்கு நாங்கள் பெர்சேயை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சிவப்புச் சட்டையும் தொப்பியும் அணிந்திருந்த ஒருவரின் குரல் கேட்கிறது.
9 நிமிடங்களுக்கு ஓடும் இன்னொரு வீடியோ பதிவில் சிவப்புச் சட்டையினர் ஒவ்வொரு பெர்சே அணி வாகனத்தையும் திரும்பிப் போகச் சொல்கின்றனர்.
இது நடந்துகொண்டிருக்கையில் சாலையில் வாகன நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
இதற்கிடையில் பெர்சே வாகன அணியில் பங்கேற்றவர்களில் சிலர் சிவப்புச் சட்டையினருடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
இறுதியில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த பெர்சே உறுப்பினர்களும் சிவப்புச் சட்டையினரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டதை வீடியோ பதிவு காட்டுகிறது.
“ஓகே, போகலாம். மஞ்சள் சட்டையினர் போகலாம்”, என்று சிவப்புச் சட்டை அணிந்திருந்த ஒருவர் தமது கூட்டத்தினரிடம் கூறியதைத் தொடர்ந்து பெர்சே வாகன அணி அங்கிருந்து புறப்பட்டதை வீடியோ பதிவில் காணலாம்.