பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட உறுப்பினர் ஹுடுட் மசோதாவை தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
பட்ஜெட் 2017 விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இரண்டு அல்லது மூன்று மசோதாக்களுக்கு மட்டுமே நேரம் இருக்கிறது.
வழக்கமாக, அரசாங்க மசோதாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி ஹாடியின் மசோதா விவாதிக்கப்படும் சாத்தியம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அஸலீனா ஓத்மான் சயிட் கூறினார்.
மேலும், சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யக் கோரும் மசோதா இருக்கிறது.
மீதமுள்ள மசோதாக்களை விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. போதுமான நேரம் இருப்பதாக கூற முடியாது என்றார் அமைச்சர்.
நாளை தொடரும் நாடாளுமன்ற அமர்வில் பட்ஜெட் தொடர்ந்து விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தின் இப்போதையத் தொடர் கூட்டம் நவம்பர் 24 இல் முடிவடைகிறது.