முதியோரைப் பராமரிக்க அரசாங்கம் புதிய இல்லங்களைக் கட்டப்போவதில்லை.
பெரும்பாலோர் வயதான பெற்றோரை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ளாமல் இந்த இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இம்முடிவுக்கு வந்திருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிம் கூறினார்.
“இவ்வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். எனவேதான், இப்போதுள்ள ஒன்பது இல்லங்களுக்குமேல் புதிதாக எதுவும் கட்டப்படாது”, என நேற்று கூச்சிங்கில் மூத்த குடிமக்களுக்காக கம்போங் மலேசியா ஜெயா நடவடிக்கை மையத்தைத் திறந்து வைத்தபோது அமைச்சர் கூறினார்.
“பல பிள்ளைகள் பெற்றோரைக் கவனித்துக் கொள்வதைத் தவிர்க்க வசதியாக அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்த்து விடுகிறார்கள். இரக்கமற்ற சிலர் அவர்களை வாசலில் இறக்கிவிட்டு கார்களை ஓட்டிச் சென்று விடுவார்கள், உள்ளேகூட அழைத்து வருவதில்லை”, என்றாரவர்.
முதியோர் இல்லங்களை ஓய்வு இல்லங்களாக மாற்றி அமைக்கும் முயற்சியும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரொஹானி தெரிவித்தார்.
“அங்கு பெற்றோரை அனுப்பி வைப்போர் அவர்களின் உணவுக்காகவும் மற்ற சேவைகளுக்காகவும் நாளொன்றுக்கு ரிம50 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்”, என்றாரவர்.
வாசலில் இறக்கிவிட்டு செல்பவர்கள் எப்படி அவர்களை வீட்டில் வைத்து காப்பாற்றுவார்கள்? கொஞ்சம் சிந்தியுங்கள் மேடம்!