பெர்சத்து அம்னோவுக்கு ஈடான எதிர்க்கட்சியாக உருவாகி வருகிறது- முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர்

drmடாக்டர்   மகாதிரையும்   முன்னாள்   துணைப்   பிரதமர்   முகைதின்   யாசினையும்   குறைந்து   மதிப்பிட  வேண்டாம்   என   அம்னோவை    எச்சரித்துள்ளார்   அதன்  முன்னாள்   தலைமைச்   செயலாளர்   முகம்மட்  ரட்சி   ஷேக்   அஹ்மட்.

அம்னோ     1980-களில்  செமாங்காட்   46  அமைந்தபோது   எதிர்நோக்கியதைவிட  இன்று   மிகப்   பெரிய   சவாலை   எதிர்நோக்குவதாக    முகம்மட்  ரட்சி   ஓரியெண்டல்    டெய்லிக்கு    வழங்கிய   நேர்காணலில்   கூறினார்.

அப்போது   அம்னோவுக்கு   எதிரியாக   தெங்கு   ரசாலி  ஹம்சா   மட்டும்தான்   இருந்தார்.  இன்று  கட்சியின்   முன்னாள்   தலைவர்கள்  பலர்   அதன்   எதிரிகளாக   உள்ளனர்.

“மகாதிரால்    வழிநடத்தப்படும்   அக்கட்சி    அம்னோ   இடங்களில்   மட்டும்தாம்   போட்டியிடும். அதுதான்   அதற்கு   பெரிய  சவாலாக   அமையும்”,  என்றாரவர்.

அடுத்த   பொதுத்   தேர்தலுக்கு  முன்னதாக    அம்னோவும்   பாஸும்   கூட்டுச்   சேர்ந்தாலொழிய   பக்கத்தான்   ஹராபான் -பெர்சத்து   கூட்டணியிடம்  அது  தோல்வி  காணலாம்   என்றவர்   ஆருடம்  கூறினார்.

அம்னோவின்    மூத்த   அரசியல்வாதியான   முகம்மட்  ரட்சி  பல  தவணைகள்   கங்கார்   எம்பி-ஆக  இருந்திருக்கிறார்.  உள்துறை  அமைச்சராகவும்  பணியாற்றியிருக்கிறார்.

1எம்டிபி  பற்றிக்  குறிப்பிட்ட   முகம்மட்  ரட்சி,  மலேசிய  அரசியலில்   அனைத்துலக   அளவிலும்   அது   பெரிய   தாக்கத்தை   ஏற்படுத்தியுள்ளதாகவும்   அதை  மறக்க  “ ஒரு  தலைமுறைக்  காலம்”   ஆகும்   என்றார்.

“கிராமப்புற  மக்கள்   அது  குறித்து   கவலை  கொள்வதில்லை    என்று  கூறப்படுகிறது.    ஆனால்,  விலைவாசி  உயர்வு    அவர்களின்  வாழ்க்கையையும்   பாதிக்கவே   செய்யும்”,  என்றார்.

இன்றைய   இளைஞர்களுக்கு   1எம்டிபி   பற்றித்   தெரியும்.  அரசாங்கம்  எவ்வளவுதான்   விளக்கமளித்தாலும்   அவர்களின்  கருத்து  மாறப்போவதில்லை.

சிவப்புச்  சட்டையினரின்  சேட்டைகளும்  அம்னோவின்   பொதுத்   தோற்றத்துக்கு   உதவப்போவதில்லை   என்றும்  முகம்மட்  ரபிசி   குறிப்பிட்டார்.

அவர்களின்   சேட்டைகளைக்  கண்டு  மலாய்  இளைஞர்கள்  வெறுப்படைந்துள்ளனர்.

“மலாய்க்காரர்களே  இப்படி   என்றால்   மற்ற  இனத்தார்   என்ன  நினைப்பார்கள்.  இந்த  எதிர்மறை  கருத்து   அம்னோவைப்   பாதிக்கும்”.

ஒரு  நேரத்தில்  அம்னோவை   எல்லா  இனத்தவரும்  மதித்தனர்.  ஏனென்றால்,  அது  நேர்மையாக   இருந்து    எல்லாரையும்   கவனித்துக்  கொண்டது  என்றாரவர்.