1எம்டிபி மீது வாதமிடுவது எம்பிகளின் உரிமை- ஷாபி அப்டால்

shafieபார்டி   வாரிசான்   சாபா   தலைவர்   ஷாபி  அப்டால்,   நாடாளுமன்ற   விவாதங்களின்போது   அரசின்  முதலீட்டு   நிறுவனமான  1எம்டிபி  குறித்து   பேசும்   உரிமை   ஒரு   நாடாளுமன்ற  உறுப்பினரான    தமக்கு    உண்டு   என்று   தற்காத்துப்   பேசினார்.

“நாடாளுமன்றத்தில்   பேசுவதற்காக    நாடாளுமன்ற   உறுப்பினர்களை   விசாரிப்பது   கூடாது.

“அது  (மக்களவை)   கூட்டரசு    அரசமைப்பையும்   சட்ட   ஆளுமையையும்    நிலைநிறுத்துவதற்கு    சுதந்திரமாக   பேசுவதற்கும்   விவாதிப்பதற்குமான   இடமாகும்”,  என   இன்று   புக்கிட்   அமான்   போலீஸ்   தலைமையகத்துக்கு   வெளியில்   செய்தியாளர்களிடம்   ஷாபி   கூறினார்.

அதுவும்  மக்களின்  வாழ்க்கையைப்  பாதிக்கும்    விவகாரங்கள்  குறித்து    பேசும்போது   அந்த  உரிமை   அவர்களுக்கு  உண்டு  என்றவர்   சுட்டிக்காட்டினார்.

முன்னதாக   அந்த   முன்னாள்   அம்னோ   அமைச்சரை   அவர்   நாடாளுமன்றத்தில்   பட்ஜெட்  2017மீது   விவாதம்   செய்தபோது    தெரிவித்த  கருத்துகளுக்காக   போலீசார்   ஒரு  மணி  நேரம்   விசாரித்தனர்.

“அது  நாடாளுமன்ற   உறுப்பினர்களின்   பேச்சுரிமைக்கு    விடுக்கப்படும்  மிரட்டலாகும் .

“பேச்சுக்கும்   சில   கட்டுப்பாடுகள்   உண்டு.  ஆட்சியாளர்கள்  குறித்தும்   சில   உரிமைகள்   குறித்தும்    பேசக்  கூடாது”,  என்று  ஷாபி    தெரிவித்தார்.

தொடக்கூடாத   விவகாரங்கள்   குறித்து    தமக்கு   நல்லாவே    தெரியும்   என்றாரவர்.

“எது   தேச  நிந்தனை   எது  தேச  நிந்தனை   அல்ல   என்பது    எங்களுக்கு   நன்றாகவே  தெரியும்”.

நாடாளுமன்றத்தில்   பேசிய   பேச்சுக்காக    போலீசாரால்  விசாரணைக்கு  அழைக்கப்பட்ட   மூன்றாவது   எம்பி  ஷாபி .  அவருக்கு  முன்னதாக   முன்னாள்   நிதி  அமைச்சர்   II  அஹ்மட்  ஹுஸ்னி  அப்துல்லா,  முன்னாள்   துணைப்  பிரதமர்   முகைதின்   யாசின்   ஆகிய  இருவரும்    விசாரணைக்கு  அழைக்கப்பட்டிருந்தனர்.