பெர்சேயாலும் மகாதிர், சோரோஸாலும் பேராபத்து: அம்னோ பிரிவுகள் ஆண்டுக் கூட்டத்தில் எச்சரிக்கை

umnoநேற்றிரவு   அம்னோவின்  நடப்பில்   துணைத்   தலைவர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி      ஆற்றிய   உரையைத்   தொடர்ந்து   இவ்வாண்டு   அம்னோ  பிரிவுகளின்  ஆண்டுக்  கூட்டங்களில்     பெர்சே  மீதும்   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,    அமெரிக்கக்   கொடீஸ்வரர்   ஜார்ஜ்  சோரோஸ்   ஆகியோர்மீதும்   மிகுந்த   கவனம்   செலுத்தப்படுவதைப்  பார்க்கிறோம்.

மகாதிர்  எதிரணியில்   சேர்ந்து கொண்டு      டிஏபியின்  லிம்  கிட்  சியாங்குடன்   கூடிக்குலாவுவதாக   அம்னோ  மகளிர்  பிரிவுத்   தலைவர்   ஷாரிசாட்  அப்துல்   ஜலில்  சாடினார்.

“நம்முடைய   முன்னாள்   தலைவர்    ஒருவர்   எதிரணியுடன்   கைகோத்து  நிற்பதை  நினைத்தால்  வருத்தமாக  உள்ளது.

“என்று   அவர்   லிம்  கிட்  சியாங்குடன்  கொஞ்சிக்  குலாவுவதைக்  கண்டேனோ   அதுவே    என்  வாழ்க்கையில்  இருண்ட   நாளாகும்”,  என  ஷாரிசாட்  கூறினார்.
அன்னிய   சக்திகளான  சோரோஸ்   போன்றோரிடமிருந்தும்   மலேசியா  மிரட்டலை   எதிர்நோக்குவதாக      அவர்   சொன்னார்.

அம்னோ  இளைஞர்  பிரிவுத்    தலைவர்   கைரி  ஜமாலுடின்,  அரசாங்கத்தின்மீது  வெறுப்பை     வளர்க்கும்   அமைப்புத்தான்   பெர்சே    என்று   சாடினார்.

ஒரு   காலத்தில்   பெர்சேயையும்   சோரோஸையும்   கண்டனம்    செய்த    மகாதிர்    இப்போது    அமெரிக்கக்  கோடீஸ்வரர்  சோரோஸின்  பண   உதவியுடன்    நடத்தப்படும்     பெர்சே  பேரணியில்   கலந்து  கொண்டதை     அவர்   சுட்டிக்காட்டினார்.  அவரது  உரைக்கிடையே   மகாதிர்   மாறிவிட்டதைக்  காண்பிக்கும்  காணொளிகளும்   காண்பிக்கப்பட்டன.

மகாதிர்   அவரது  உரைகளில் “Melayu mudah lupa (மலாய்க்காரர்களுக்கு  மறதி  அதிகம்)’  என்று  கூறுவதுண்டு.  அதை  வைத்தே  கைரி    கிண்டலடித்தார்.  அம்னோ  இளைஞர்கள்   முன்னாள்   பிரதமரின்   பங்களிப்பை  மறக்க  மாட்டார்கள்;   அதே  நேரத்தில்   அவர்  அம்னோவுக்கு  இழைத்த   துரோகத்தையும்  மறக்க    மாட்டார்கள்   என்றார்.

புத்ரி  அம்னோ   தலைவர்   மாஸ்  எர்மியாதி   அவரது  உரையில்   “நாட்டின்   உள்விவகாரங்களில்   அன்னியர்   தலையீட்டை”க்  கண்டித்தார்.

அன்னியர்கள்,     “சோரோஸ்  போன்ற  கயவர்கள்”  மலேசியர்கள்மீது   ஆதிக்கம்   செலுத்த   அனுமதிக்க்கூடாது    என்றாரவர்.

“சோரோஸ்   போன்றோரே   நாட்டின்  எதிரிகள்.

“எனவே,  சோரோஸுடன்  சேர்ந்து   அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முனவது   எவராக  இருப்பினும்,   அவர்கள்   நாட்டுக்கு  பெடும்  பங்களிப்பு   செய்திருந்தாலும்கூட,   துரோகிகளாகவே  கருதப்பட   வேண்டும்”,  எனக்  காட்டமாகக்  குறிப்பிட்டார்.