‘சீக்கிய சமயம் இஸ்லாத்திலிருந்து வந்ததாகக் கூறும் ஆசிரியரை விசாரிக்க வேண்டும்’

sikh‘யூத  மதம்,  கிறித்தவம்,  இந்து ,பெளத்த   சமயங்கள்  இஸ்லாத்திலிருந்து  வந்தவையா?’   என்ற  நூலில்  பிழைகள்   மலிந்திருப்பதால்    நூலாசிரியர்   அஹ்மட்  இஹ்ராம்   முகம்மட்   நூரைப்   போலீசார்   விசாரிக்க   வேண்டும்    என  மலேசிய   தேசிய   சீக்கியர்   இயக்கம்    விரும்புவதாக     அதன்   தலைமைச்   செயலாளர்   அமர்ஜிட்   சிங்   கில்     கூறினார்.

“தலைப்பே   தப்பு.  அது  சீக்கிய  சமயமும்  இஸ்லாமும்   ஒன்றுதான்   எனக்   கூற  முயல்வதுபோல்   அமைந்து    மக்களைக்    குழப்புகிறது.

“அது   தப்பு,  அடிப்படையற்றது.   அதுவும்   குறிப்பாக,   எல்லாச்    சமயத்தாரும்   நல்லிணக்கத்துடன்    வாழும்   மலேசியாவில்    மத  நிந்தனை  செய்யும்   இச்செயலைச்   சகித்துக்கொள்வதற்கில்லை”  அமர்ஜிட்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

எம்பிஎச்   கடைகளில்  விற்கப்படும்   அந்நூல்,  சீக்கிய   மத  நிறுவுனர்  குரு  நானாக்   மக்காவுக்கு  ஹஜ்ஜு  யாத்திரை   சென்றார்    என்றும்   குரு   நானாக்   சீக்கிய   மதத்த்தை   அமைக்குமுன்னரே    இந்திய   முஸ்லிம்  கவிஞரான   கபீர்   அதற்கு  அடித்தளம்   அமைத்துக்  கொடுத்தார்    என்றும்   கூறுகிறது.

“இந்நூலில்  காணப்படும்   மேற்சொன்ன   கருத்துகள்    வருத்தமளிக்கின்றன,  அவை  இதற்குமுன்   மலேசியா   வந்திருந்த    இஸ்லாமிய    சமயச்  சொற்பொழிவாளர்   ஜாகிர்    நாய்க்    எடுத்துரைத்த   கருத்துகளை  ஒத்துள்ளன”,  என்றாரவர்.

சீக்கிய   சமயம்   குறித்து   தப்பான   தகவல்களைக்  கொண்டிருப்பதுடன்   சீக்கிய  சமயத்தின்       வரலாற்றையே   மாற்றி      அமைக்க   முனையும்      இந்நூலின்மீது   மலேசிய    சீக்கியர்கள்    ஆத்திரம்   கொண்டிருப்பதாக   அமர்ஜிட்   கூறினார்.