ஸுனார்: என் நூலுக்குத் தடை விதிக்கலாம்; சிந்தனைகளைத் தடுக்க முடியாது

zunarசிறைக்குள்   தள்ளப்படும்   அபாயமிருந்தாலும்    அதைக்  கண்டு   அஞ்சுபவரல்ல   அரசியல்   கேலிச்சித்திர  ஓவியர்   சுல்கிப்ளி    அன்வார்   அல்ஹாக்.

ஸுனார்   என்ற  பெயரில்   பிரபலமாக   விளங்கும்    அக்கேலிச்சித்திர    ஓவியர்,  “ஊழலையும்   அநீதியையும்    அம்பலப்படுத்தும்”  பொறுப்பு   தமக்குண்டு    என்கிறார்.

“கலைத்திறன்   என்பது   ஒரு  அருட்கொடையல்ல.   அது  ஒரு   பொறுப்பு.  சிறைசெல்ல   அச்சமா    என்று  கேட்டால்    அச்சம்தான்.  ஆனால்,  அச்சத்தைக்  காட்டிலும்   பொறுப்பு   மிகப்   பெரிது.

“என்  நூல்களைத்  தடை   செய்யலாம்.  ஆனால்,  என்  சிந்தனைகளைத்    தடை   செய்ய   முடியாது.  பேனா  மை  தீரும்வரை    சித்திரம்  வரைந்து  கொண்டுதான்   இருப்பேன்”,  என்றவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

கடந்த   சனிக்கிழமை,  கோலாலும்பூரில்   நிதிதிரட்டும்   நிகழ்வு  ஒன்றில்   ஸுனார்  கைது   செய்யப்பட்டார்.  அவருடைய   நூல்கள்   ஆயிரத்துக்கும்   மேற்பட்டவை    பறிமுதல்   செய்யப்பட்டன.   அதனால்    ஏற்பட்ட    இழப்பு   சுமார்    ரிம30,000   என்று    அவர்  சொன்னார்.

“போலீஸ்  நிலையம்  கொண்டு   செல்லப்பட்டு   நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குப்  பாதகமாக   நடந்து  கொண்டதற்காக   குற்றவியல்   சட்டத்தின்   124  பிரிவின்கீழ்   விசாரிக்கப்பட்டேன்.

“கிட்டத்தட்ட   ஆறு  மணி   நேரம்  விசாரிக்கப்பட்டு   நள்ளிரவில்தான்   அதுவும்   பிணையில்   விடுவித்தனர்.  டிசம்பர்  30-இல்   நான்  மீண்டும்   போலீஸ்  நிலையம்   செல்ல   வேண்டும்”,  என  ஸுனார்   தெரிவித்தார்.