நாட்டுக்கு மேலும் கேடு விளைவிப்பதலிருந்து நஜிப்பை நிறுத்த வேண்டியிருப்பதால் பேரப்பிள்ளைகளுடன் விளையாடவில்லை, மகாதிர்

 

MwhyshouldPMவயதானவர்கள் செய்ய வேண்டியதை ஏன் தாம் செய்யவில்லை என்பதை முன்னாள் பிரதமர் மகாதிர் விளக்கினார்.

மகாதிரும் கிட் சியாங்கும் தங்களுடய பேரப்பிள்ளைகளுடன் விளையாடி காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறியிருந்தார்.

90 வயதானவர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட்டிக் கொண்டு அடுத்த உலகத்திற்குச் செல்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளாமல் வேண்டாத வேலைச் செய்வதாக சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்ட மகாதிர், ஏராளமான மலேசிய மக்கள் தம்மை ஏதாவது செய்யுமாறு விடுத்துள்ள வேண்டுகோள்களுக்கு தாம் எதிர்வினையாற்றுவதாக கூறினார்.

கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளேன்

நஜிப் பிரதமர் பதவி ஏற்ற பிறகு, பலதரப்பட்ட மக்களிடமிருந்து தாம் ஏராளமானப் புகார்களை பெற்றதாகவும் அவற்றை நஜிப்பிடம் தெரிவித்ததாகவும் கூறிய மகாதிர், பயன் ஒன்றுமில்லை என்றார்.

அடுத்து வந்தது, 1எம்டி விவகாரம். நாடு ஏராளமான பணத்தை இழந்தது. நஜிப்பை நிறுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தாம் உணர்ந்ததாக மகாதிர் கூறினார்.

இனிமேலும் தாம் நஜிப்பை ஆதரிக்க முடியாது என்று அவரிடம் தெரிவித்த பின்னர், மகாதிர் அம்னோவிலிருது விலகியதாக கூறினார்.

“இப்போது மற்றவர்கள் ஏதாவது செய்யுங்கள் என்று என்னை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. நாட்டிற்கு மேலும் கேடு விளைவிக்காமல் இருக்க நஜிப்பை நிறித்த வேண்டிய தேவையை நான் உணர்கிறேன்”,  என்றார் மகாதிர்.

சட்ட ஆளுமையைப் பயனற்றதாக ஆக்கிவிட்டார் நஜிப்; நாட்டின் அமைப்புகள் அவரை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாதவைகளாகி விட்டன என்று மகாதிர் மேலும் கூறினார்.

1எம்டிபி சம்பந்தமாக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் நஜிப் அச்சப்படவில்லை. இன்னும் பல கோடிக்கணக்கான கடன்களை கிழக்குக்கரை ரயில்வே, கேல்-சிங்கப்பூர் மிகு வேக ரயில் திட்டம் மற்றும் பேன் – போர்னியோ சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு பெற திட்டமிட்டார் என்றார் மகாதிர்.

இக்கடன்களை நாடு தாங்கிக் கொள்ள முடியாது; ஒன்று திவாலாக வேண்டும் அல்லது நாட்டின் சொத்துக்களை விற்க வேண்டும் என்று கூறிய அவர், அது இப்போது நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்

துன் ரசாக் எக்ஸ்சேஞ், பண்டார் மலேசியா மற்றும் எட்ரா எனர்ஜி ஆகியவை விற்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“இவ்வளவும் நடந்துகொண்டிருக்கையில், அசையாமல் அமர்ந்து கொண்டு பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு 90 வயதான குடிமகனுக்கு கடினமானதாகும்.

“ஆம், நான் அடுத்த உலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கையில், இதரச் செயல்களைச் செய்வதற்கு என்னிடத்தில் நேரம் இருக்கிறது.

“நான் செய்யக் கூடிய இதர செயல்கள் நாட்டிற்கு கேடுகளை இழைத்து வரும் நஜிப்பை தடுப்பதற்குச் சில கருத்துகளை அளிப்பதாகும்”, என்று முன்னாள் பிரதமர் மகாதிர் மேலும் கூறினார்.