மகாதிர்: சிலர் எப்படி மனமுவந்து நஜிப்பிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது வியப்பூட்டுகிறது

 

Kowtowசில தனி நபர்கள், படித்த மற்றும் விவரமறிந்தவர்கள் உட்பட, எப்படி மனமுவந்து பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது வியப்பூட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

“ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அவர்களின் தலைவர் போல, அவரது கையையும் முத்தமிடுகின்றனர்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை முன்னெடுத்துள்ள சிவில் வழக்குகளைச் சுட்டிக்காட்டி, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்புக்கு தொடர்பு உண்டு என்பதற்கு “போதிய ஆதாரம்” இருக்கிறது என்பது இந்தத் தனி நபர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றாரவர்.

“ஆனால், அவரை தங்களுடைய தலைவராக அவர்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்கின்றனர்; அவரைச் சூழ்ந்து கொண்டு அவரது கையைக் குலுக்கி முத்தமிடுகின்றனர். சமூகத்தில் உயர்ந்தவர்கள்கூட அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்”, என்று அவர் மேலும் கூறினார்.

இதர நாடுகளில் இம்மாதிரியான தலைவர்கள் அகற்றப்பட்டிருப்பார்கள், அல்லது குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தெரியும் வரையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள்.

“ஆனால், மலேசியாவில், மக்கள், கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் மிக, மிக முக்கியமான மக்கள் உட்பட, இன்னும் நஜிப்பின் நிருவாகத்தையும் தலைமைத்துவத்தையும் ஆதரிக்கின்றனர்.

“கேட்டால், ஊழல் மற்றும் பெரும் மோசடி குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இந்நாட்டிலும் உலகம் முழுவதிலும் கூறப்பட்டிருந்தாலும், அக்குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை என்று சிலர் வலியுறுத்துகின்றனர். அவர் குற்றவாளி எனத் தீர்பளிக்கப்படும் வரையில் அவர்கள் தொடர்ந்து அவரை தங்களுடைய சட்டப்பூர்வமான தலைவர் எனக் கருதுவர்”, என்று மகாதிர் விளக்கினார்.

அதிகாரிகளால் மூடிமறைத்தல் இருப்பதாகச் சாடிய மகாதிர், அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்றார்.

“அவர்கள் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும்…சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஏற்ப நாட்டை ஆள்வதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்கள் உண்மையிலேயே துரோகம் இழைத்துவிட்டனர்”, என்று மகாதிர் இடித்துரைத்தார்.