சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
அவர் அண்மையில் கோத்தா சமராஹானில், சரவாக் பொது மருத்துவமனையில் இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
அடினான், 2014, பிப்ரவரி-இல் அப்துல் தயிப் மஹ்மூட்டிடமிருந்து முதலமைச்சர் பதவியை ஏற்றார்.
அவருடைய இறப்புக்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை.
அடினான் நான்காண்டுகளுக்குமுன் இருதயக் கோளாறு காரணமாக இறப்பின் எல்லையைத் தொட்டுவிட்டுத் திரும்பினாராம். அவரே அதைச் சொல்லியிருக்கிறார்.
“மூன்றாண்டுகளுக்குமுன் மிகவும் நோயுற்றிருந்தேன். தேசிய இருதய கழகத்தில் இருந்தேன்(கோலாலும்பூர் ஐஜேஎன்). பிறகு சிங்கப்பூர் சென்றேன். அப்போது ஒரு முறை போகப் போகிறோம் என்ற எண்ணம் வந்து விட்டது. என் உறவினர்கள், என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாரையும் அருகில் அழைத்தேன்”, என கடந்த ஆண்டு சரவாக் தேர்தலுக்குமுன் பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்காணலில் அடினான் கூறினார்.
அடினான், கடந்த மாநிலத் தேர்தலில் 72 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றி பிஎன்னுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தார்.
அரசியலில் நீண்ட காலம் பொறுமை காத்தவர் ! தன் மனதிற்கு சரியென பட்டதை தயங்காமல் போட்டுடைப்பவர்.