மலேசிய போலீசார் எட்டு இந்தோனேசியர்களை நாடு கடத்தியுள்ளனர். அந்த எண்மரில் ஒருவர் அவரது கைப்பேசியில் ஐஎஸ் படங்கள் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
அவர்களை முதலில் கைது செய்தவர்கள் சிங்கப்பூர் அதிகாரிகள் என்றவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் ஊட்லண்ட்ஸ் சுங்க, குடிநுழைவுத்துறையில் பிற்பகல் மணி 1.30க்கு சிங்கப்பூர் அதிகாரிகள்
அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள்.
“சோதனையின்போது ஒருவரின் கைப்பேசியில் காலணி கொண்டு குண்டு தயாரிக்கும் முறையைச் சித்திரிக்கும் காணொளி உள்பட ஐஎஸ்-தொடர்புப் படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது”.
அதன் பின்னர் சிங்கை அதிகாரிகள் அந்த எண்மரையும் மேல் விசாரணைக்காக மலேசிய போலீசிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்களைப் பற்றிய பல விவரங்கள் தெரிய வந்தன. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள Sekolah Pondok Darul Hadits மாணவர்களான அவர்கள், அவர்களில் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜனவரி 3-இல் மலேசியா வந்தனர்.
ஆனால், நான்கு நாள் கழித்து அவர்கள் தாய்லாந்தில் உள்ள பட்டாணி நோக்கிச் சென்றார்கள். அந்த வட்டாரத்தில் உள்ள இஸ்லாமிய கல்வி வாரியத்தின் கல்விமுறை பற்றித் தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றார்களாம்.
அங்கிருந்து திரும்பியதும் ஜோகூர் வழியாக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்கு பிடிபட்டனர்.
அவர்கள் நாடு கடத்தப்பட்டதை புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவு உதவி இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தினார்.
பெர்னாமா