மரபணுச் சோதணைக்குப் பின்னரும் குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

 

DNAtest1தம்முடைய குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பள்ளியில் படிப்பதைத் தொடர்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ஒரு தகப்பனார் சீற்றமடைந்துள்ளார்.

இப்பிரச்சனை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலைதூக்கியது என்று எம். வெங்கடேஸ்வரன், 44, கூறினார். அவருடைய குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லாததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை பள்ளிக்கூடத்தில் படிப்பதிலிருந்து நிறுத்தி விட்டார்.

அவர்களிடம் கல்வி இலாகாவிற்குச் செல்லும்படியும் குழந்தைகளின் குடியுரிமைத் தகுதியை தேசியப் பதிவு இலாகாவிடம் உறுதிப்படுத்திக்கொள்ளும்படியும் கூறப்பட்டது.

வெங்கடேஸ்வரன் கொடுக்கப்பட்ட ஆலோசனைப்படி நடந்துகொண்டார். மேலும், குழந்தைகள் மூன்றும் அவருடையதுதான் என்பதை நிருபிப்பதற்காக மரபணுச் சோதணையும் செய்து கொண்டார். அவர் இதைச் செய்தற்கான காரணம் அவருடைய குழந்தைகளின் பிறப்புப் பத்திரங்களில் அவருடைய மற்றும் அவருடையை மனைவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர்களுடைய குடியுரிமைத் தகுதியும் குறிப்பிடப்படவில்லை.

மரபணுச் சோதனை செய்து கொண்ட பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றும் தேசியப் பதிவு இலாகாவிடம் ஒரு மனுவும் செய்து கொண்டதாக வெங்கடேஸ்வரன் இன்று பினாங்கில் மாநில கல்வி இலாகாவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறினார்.

“ஆனால், ஐந்து மாதங்களுக்குப் பின்னர், பள்ளிக்கூடம் குழந்தைகளை பள்ளியிலிருந்து விலக்கி வீட்டுக்குப் போங்கள்”, என்று கூறியதாக வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இதனால் மூன்று குழந்தைகளும், சூரியா, 12, அகிலாண்டஸ்வரி , 11 மற்றும் தூரநாயகி, 10, இப்பிரச்சனையால் பெரும் குழப்பத்திற்காளாகியுள்ளனர்.

“நாங்கள் கடுமையாகப் படிக்க விரும்புகிறோம், எங்களைப் பள்ளிக்குச் செல்ல விடுங்கள்”, என்று சூரியா கூறினான்.

DNAtest2சுதந்திரம் என்ற ஒரு புதிய அரசுசார்பற்ற அமைப்பு வெங்கடேஸ்வரனின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான அவர்களுடைய உரிமையைப் பெறுவதற்கு வேண்டிய  உதவிகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளது.

பிறப்புப் பத்திரங்கள் இல்லாத குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற்றிருந்தால் அவரின் குழந்தைகள் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் கையிர் முகமட் யூசுப் கூறியிருந்தை சுதந்திரம் அமைப்பின் தலைவர் எம். கணேசன் மீண்டும் நினைவுப்படுத்தினார்.

“வெங்கடேஸ்வரனின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்படுமானல், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்”, என்று கணேசன் கூறினார்.

மாநில கல்வி இலாகாவிற்கு வெளியில் ஒரு கூட்டத்தை சிறிது நேரத்திற்கு நடத்திய சுதந்திரம் ஒரு மகஜரை மாநில கல்வி இயக்குனர் ஷாஅரி ஓஸ்மானிடம் வழங்க முயற்சித்தது. அவர் அங்கில்லாததால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவருடன் இவ்விவகாரம் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.