பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த எதிர்ப்பு, ஆனால் சாபாவில் நடத்த எதிர்ப்பு இல்லை, ஏன்?

 

Snapelectionwhynotfor Penangசபாவில் திடீர் தேர்தல் நடத்தலாம் என்பதை பாரிசான் நேசனல் ஆதரிக்கிறது என்று த ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வியப்பு தெரிவித்துள்ளார்.

வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அச்செய்தி பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் ரசாக் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறுகிறது.

ஆனால், சாபா முதலமைச்சர் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது பற்றி ஊகங்கங்கள் செய்ய வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டில், பினாங்கில் முன்னதாக ஒரு மாநிலத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற டிஎபியின் முன்மொழிதல் கடுமையாகக் குறைகூறப்பட்டதை லிம் நினைவுகூர்ந்தார்.

கடந்த ஜூன் 30 இல் டிஎபி மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்மொழிதலைச் செய்தது. ஆனால், ஜூலை 31 இல் அது கைவிடப்பட்டது.

“பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த வேண்டும் என்ற போது நாங்கள் கடுமையாகக் குறைகூறப்பட்டோம். இப்போது, அவர்கள் (சாபாவில்) அதைச் செய்ய விரும்புகின்றனர். ஏன்?”, என்று லிம் வினவினார்.

சாபாவில் திடீர் தேர்தல் நடத்துவதற்கான பாரிசான் முன்மொழிதலை “கபடநாடகம்” என்று சாடிய லிம், இது ஏன் தேவைப்படுகிறது என்பதை பாரிசான் நேசனல் தலைவர்கள் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.