இன்று அதிகாலை கோத்தா திங்கியில் ஒரு செம்பனை தோட்டத்துக்கு அருகில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஜோகூர் போலீஸ் துணைத் தலைவர் சக்கரியா அஹ்மட் இதனைத் தெரிவித்தார்.
போலீஸ் குழுவொன்று குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த இந்தோனேசியர்கள் என நம்பப்படும் இருவரை நிற்குமாறு பணித்தனர்.
ஆனால், நிற்காமல் செம்பனை தோட்டம் ஒன்றுக்குள் புகுந்ததாக சக்கரியா தெரிவித்தார்.
“மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் இருவரும் கீழே விழுந்தனர். போலீசார் அவர்களைச் சரணடையுமாறு உத்தரவிட்டனர். அவர்களில் ஒருவன் போலீசை நோக்கிச் சுட்டான்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
போலீசார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் தாக்குதல்காரன் கொல்லப்பட்டான்.
“மற்றொருவன் ஒரு வெட்டுக்கத்தியை ஏந்தி போலீசாரை நோக்கி ஓடி வந்தான். அவனையும் பொலீசார் சுட வேண்டியதாயிற்று”, என்றாரவர்.