பொருத்தமற்ற உடை அணியும் பெண்கள் மீது சாயம் தெளிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்த “தைப்பூசம் சாயம் தெளிக்கும்” கூட்டத்தை உருவாக்கியவர் என்று கூறப்படுபவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செபெராங் பிறையைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர் இன்று காலை மணி 9.20 க்கு கைது செய்யப்பட்டார் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் அப்துல் சாமா மாட் கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபரை ரிமாண்டில் வைப்பதற்காக மனு செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் சாமா சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் கூறினார்.
ஹென்றி பார்னபாஸ் என்பவர் அவரது முகநூல் வழி அந்த கூட்டத்தை உருவாக்கினார். அதில் இன்றுவரையில் 680 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அந்த முகநூல் பதிவில் “பொருத்தமற்ற” சேலை இரவிக்கையின் படம் வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறான உடை அணிந்து தைப்பூசத்திற்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீறினால் ஏரோசோல் சாயம் தெளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்து சமயச் சடங்குகளையும் இந்திய கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக இந்த கூட்டம் உருவாக்கப்பட்டது என்று தமது தனிப்பட்ட பக்கத்தில் கூறிக்கொண்ட பார்னபாஸ், பெண்கள் “விலைமகள்கள் போல நடந்துகொள்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்.