பினாங்கில் மலாய்க்காரர்கள், இஸ்லாம் ஆகியவற்றின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற ஹாடியின் கூற்றை பினாங்கு அரசு மறுத்தது

 

hadiபினாங்கில் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் நலன்களை பாதுக்காக்க பினாங்கு அரசு தவறி விட்டது என்று பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்த குற்றச்சாட்டை பினாங்கு மாநில அரசு மறுத்துள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பலவிதமான கொள்கைகள் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் முந்திய பிஎன் நிருவாகங்களுடன் ஒப்பிடுகையில் அதன் சாதனைகள் பற்றி ஹாடிக்கு தெரியாமல் இருக்கும் சாத்தியமே இல்லை என்று பினாங்கு மாநில ஆட்சிக்குழுவின் சமயத்திற்கு பொறுப்பான உறுப்பினர் அப்துல் மாலிக் காசிம் கூறினார்.

பினாங்கில் டிஎபி மற்றும் பிகேஆர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் நிருவாகத்தின்கீழ் இஸ்லாம் தொடர்ந்து தழைத்தோங்கும் என்பதுதான் உண்மை என்றாரவர்.

“பினாங்கில் மலாய்க்காரர்களும் இஸ்லாமும் தொடர்ந்து தற்காக்கப்படும்”, என்று அப்துல் மாலிக் காசிம் வலியுறுத்திக் கூறினார்.

மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் நலன்களை பாதுகாக்கத் தவறி விட்ட டிஎபிக்கு பாஸின் கதவுகள் மூடப்பட்டு விட்டன என்று நேற்று ஹாடி அவாங் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய மாலிக் இவ்வாறு கூறினார்.