ஹாடிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிக்கிறார் கிட் சியாங்

 

Kitlegalactionபாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தம்மை இஸ்லாத்தை-எதிர்ப்பவர் என்று சொல்லியதாகக் கூறப்படுவது குறித்து அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆலோசித்து வருகிறார்.

ஹாடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வது பற்றி சிந்திக்கும்படி தமது வழக்குரைஞரை கேட்டுக்கொண்டுள்ளதாக லிம் கூறினார்.

இன்று லிம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஹாடியின் எதிர்வினையை இறுமாப்பானது, வரம்பு மீறியது என்று குறிப்பிட்டார்.

டிஎபியுடன் ஒத்துழைக்கும் சாத்தியத்தை நிராகரிக்கும் உரிமை ஹாடிக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொண்ட லிம், அவருடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு உண்மையைத் திரித்து கூறும் உரிமை பாஸ் தலைவருக்கு கிடையாது என்றார்.

நேற்று, பாஸ் தலைவர் ஹாடி டிஎபியுடன் ஒத்துழைக்கும் சாத்தியம் இல்லை என்றார்.

இதற்கு காரணம் டிஎபி, பாஸ் கட்சியின் இஸ்லாமிய இலட்சியத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்று ஹாடி கூறியதாக த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தம்மை இஸ்லாத்தை எதிர்ப்பவர் என்று ஹாடி மறைமுகமாக கூறியதில் அவர் தவறு செய்துள்ளதாக லிம் கூறினார்.

” நான் இஸ்லாத்தை எதிர்ப்பவர் அல்ல. நான் “அனைவருக்கும் பாஸ்” என்ற 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சுலோகம் கூறும் அறிவார்ந்த, முற்போக்கான, சகிப்புத்தன்மை வாய்ந்த தூரநோக்குடைய இஸ்லாத்தை ஆதரிக்கிறேன்”, என்றார் லிம்.

ஆனால், சகிப்புத்தன்மையற்ற தீவிரவாத இஸ்லாமிய நோக்கத்தை தம்மால் ஆதரிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.