நஜிப் “மிகக் கேடு கெட்ட பிரதமர்” என்ற மிகச் சிறந்த கட்டுரைக்கு ஸைட் ரிம10,000 வெகுமதி அளிக்கிறார்

 

Zaidoffers10kஒரு பதிலடி நடவடிக்கையாக, முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டின் “மிகக் கேடு கெட்ட பிரதமர்” என்ற தலைப்பிலான மிகச் சிறந்த கட்டுரைக்கு ரிம10,000 பரிசுத் தொகையாக அளிக்க முன்வந்துள்ளார்.

அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா டிஎபி தலைவர் லிம் கிட் சியாங் பற்றி படைக்கும் மிகச் சிறந்த கட்டுரை அல்லது சமூக ஊடகப் பதிவுக்கு ரிம10,000 அளிக்கப்படும் என்று செய்த அறிவிப்பைத் தொடர்ந்து ஸைட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அனுவார், கிட் சியாங் பற்றிய கட்டுரையின் தலைப்பு இப்படி இருக்க வேண்டும்: “எல்கேஎஸ் ஓர் இனவாதி, இஸ்லாம் எதிர்ப்பாளர் மற்றும் 51 ஆண்டுகால சர்வாதிகாரி, இது உண்மையா?”, என்று கூறியிருந்தார்.

இது அனுவாரை “இனவாதிக்களுக்கெல்லாம் தகப்பன்” என்று கிட் சியாங் வர்ணித்திருந்ததிற்கு அனுவாரின் பதிலடி.

இக்கட்டுரை எழுதுவதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் சாத்தியம் உண்டு என்று ஸைட் எச்சரிக்கை செய்துள்ளார். மலேசியாவில் தாம் அவமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கருதினால் சம்பந்தப்பட்டவர் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். ஆனால் பிரதமரும் அவருடைய ஆதரவாளர்களும் மற்றவர்களைத் தடையேதுமின்றி குறைகூறலாம் என்றாரவர்.

மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்ட போது தாம் இந்த அறிவிப்பை மனமாரச் செய்வதாகக் கூறிய அவர், அதற்கு மற்ற நிபந்தனைகள் உண்டு என்றார். விருப்பமுள்ளவர்கள் தமக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்றார். அவரது மின்னஞ்சல்: [email protected].

“இக்கட்டுரை குறைந்தபட்சம் 10,000 சொற்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இது பகசா மலேசியா அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். அம்னோ அறிவித்திருப்பது போலல்லாமல், இக்கட்டுரையை முழுதுமாக என்னுடைய முழுமையான உசிதப்படி செய்யும் உரிமைக்கு உட்பட்டுதான் பிரசுரிக்க முடியும்”, என்று அவர் மேலும் கூறினார்.