அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா இனவாதத்தைத் தூண்டி விடுவதாகவும் லிம் கிட் சியாங்கின் உயிருக்கு அபாயத்தை உண்டுபண்ணுவதாகவும் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
“எல்கேஎஸ் ஓர் இனவாதி, இஸ்லாத்துக்கு எதிரி, 51 ஆண்டுகளாக ஒரு சர்வாதிகாரியா இருந்து வந்துள்ளார், உண்மையா” என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும். சிறந்த கட்டுரை அல்லது பதிவுக்கு ரிம10,000 பரிசு என்று அனுவார் அறிவித்திருப்பதன் தொடர்பில்தான் இந்தப் போலீஸ் புகார்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற கவுன்சிலர் ஜமாலியா ஜமாலுடின் இன்று காலை டமன்சாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவருடன் போலீஸ் நிலையம் சென்ற டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ இன், அனுவார் கட்டுரைப் போட்டியை இரத்துச் செய்து மன்னிப்பு கேட்டால் போலீஸ் புகார் மீட்டுக்கொள்ளப்படும் என்றார்.