பாஸ் கட்சி பெர்சத்துவுடன் ஒத்துழைக்க இயலாத குழப்பமான நிலைக்கு அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடிதான் காரணம். அவருக்கு பிறரை ஈர்க்கும் திறனுடைய தனிமனிதப் பண்பியல் இல்லை என்று மகாதிர் முகமட் கூறுகிறார்..
“நான் சமீபத்தில் கூறியபடி, அக்கட்சி மிகுந்த குழப்பத்தில் இருப்பதை நான் உணர்கிறேன்.
“சில சமயங்களில் அவர்கள் எங்களுடன் (பக்கத்தான் ஹரப்பான்) இணைய விரும்புகிறார்கள்; மற்ற நேரங்களில் விரும்பவில்லை”, என்று மகாதிர் கூறினார்.
அவர்கள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள், செய்து விட்டு தேதியை குறிப்பிட்டதும், நாங்கள் அப்படி ஏதும் கேட்கவில்லையே என்கிறார்கள். ஆக, பாஸில் ஒரு முறையான ஒருங்கிணப்பு இல்லை என்று மகாதிர் கெடாவில் கூறியதாக நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாடி வழிநடத்தும் கட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை, குறிப்பாக பெர்சத்துவுடன் ஒத்துழைக்கும் விவகாரத்தில் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்றாரவர்.
“ஆம். (கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில்) வேறுபாடு இருக்கிறது. முன்னாள் தலைவர்கள் ஃபாட்ஸில் நூர், நிக் அசிஸ் நிக் மாட் மற்றும் முகம்மட் அஸ்ரி மூடா ஆகியோருடன் ஒப்பிடுகையில் ஹாடிக்கு பிறரை ஈர்க்கும் தனிமனிதப் பண்பியல் குறைவாக இருக்கிறது”, என்று மகாதிர் குறைபட்டுக் கொண்டார்.