அரசாங்கத்துக்கு ஷியாரியா சட்டத்தில் திருத்தம் செய்யும் எண்ணம் என்றும் இருந்தது இல்லை என்பதால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கொண்டுவந்த தனிநபர் சட்டவரைவைத் தாக்கல் செய்யும் பொறுப்பை அது எடுத்துக்கொள்ளாது என்று முன்பே தாம் ஆருடம் கூறியிருந்ததாக அமனா எம்பி முஜாஹிட் யூசுப் ராவா குறிப்பிட்டார்.
“எனக்கு முன்பே தெரியும், நிதி மோசடிகளையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் பிஎன்னின் அத்துமீறல்களை மூடிமறைப்பதும் அவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவதும்தான் இதன் நோக்கமென்று.
“இதில் ஷியாரியா நீதிமன்ற விவகாரம் தூண்டில் இரையாக சிக்கிக் கொண்டதுதான் வருத்தத்துக்குரியது. அதைவிட வருத்தத்துக்கு உரியது பாஸ் (தேசிய விவகாரங்களில்) அம்னோவைச் சாடாமல் மெளனம் காத்தது. சட்டம் 355-க்கு அம்னோ அளித்திருந்த வாக்குறுதியை நம்பி அது பேசாமல் இருந்து விட்டதுபோல் தெரிகிறது”, என அந்த பாரிட் புந்தார் எம்பி கூறினார்.