மகாதிர்-நஸ்ரி விவாதத்திற்கு போலீஸ் வழங்கிய அனுமதியை அது இரத்து செய்ததற்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் செய்துள்ள புகார்கள்தான் காரணம் என்று போலீஸ் இப்போது கூறுவதை முன்னாள் பிரதமர் கிண்டல் செய்துள்ளார்.
விவாதம் நடத்தப்படவிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளதால் விவாதம் நடத்துவதற்கு மார்ச் 31 இல் கொடுக்கப்பட்ட அனுமதியை ஏப்ரல் 1 இல் போலீஸ் மீட்டுக்கொண்டுள்ளது என்று அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கும்புலான் மீடியா காராங்கிரப்பிடம் போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், விவாதம் நடைபெறவிருக்கும் காராங்கிராப்பின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம் ஒரு தொழிற்பேட்டை என்று மகாதிர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு எவரும் குடியிருக்கவில்லை. அங்கு இருப்பதெல்லாம் தொழிற்சாலைகள்தான் என்று கூறுகிறார் மகாதிர்.
ஆனால், விவாதம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று நேற்றிரவு மலாக்கா, செங்கிலில் ஒரு செராமாவில் மகாதிர் கூறினார்.
“நஸ்ரி ஒரு பையன்”
இந்த விவாதம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாக கூறிய மகாதிர், அதில் நஸ்ரியைப் பற்றி பேசுவதற்காக அல்ல – அவர் ஒரு சாதாரண சிறு பையன், பிரதமர் நஜிப் ரசாக்கைப் பற்றி பேச ஆர்வம் கொண்டிருந்தேன் என்றார்.
பின்னர் அந்தச் சிறு பையன் இன்னும் சிறுவனாக மாறிக் கொண்டிருந்தார் – அவர் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை, தமது தொகுதியான பாடாங் ரெங்காஸைத்தான் பிரதிநிதிப்பதாக கூறிக்கொண்டார் என்று மகாதிர் மேலும் கூறினார்.
இந்த விவாதத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த கும்புலான் மீடியா காராங்கிராப்பின் நிருவாக இயக்குனர் விரக்தியடைந்துள்ளார். “இந்த விவாதத்தை நடத்துவதற்கான ஆர்வத்தை நாங்கள் இழந்து விட்டோம், ஆகவே, இந்த விவாதம் இரத்து செய்யப்படுகிறது”, என்று அவர் கூறினார்.