‘அன்னிய நேரடி முதலீடு அரசியல் ஆயுதமாக மாறக் கூடாது’

cmபிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்,  அன்னிய   நேரடி  முதலீட்டை(எப்டிஐ)   ஓர்    “அரசியல்   ஆயுத”மாகப்  பயன்படுத்துவது   சரியல்ல   என்கிறார்   பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்.

எப்டிஐ-யை   வைத்து   நஜிப்புடன்   அரசியல்   விளையாட்டில்  ஈடுபடுவதில்  பினாங்கு   அரசுக்கு  விருப்பமில்லை    என  லிம்   கூறினார்.

“அரசியல்  ஆயுதமாகப்  பயன்படுத்தப்படுவதற்கும்  மேலாக    எப்டிஐ  மிகவும்   முக்கியத்துவம்    வாய்ந்தது.  அது  30  மில்லியன்   மலேசியர்களின்  பொருளாதாரத்துக்கும்  பிழைப்புக்கும்   ஆதாரமானது”,  என  லிம்  ஓர்  அறிக்கையில்   குறிப்பிட்டார்.

வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்   பினாங்கிலிருந்து      வெளியேறி     வருவதாக    நஜிப்    அண்மையில்   வலைப்பதிவு   ஒன்றில்    குறிப்பிட்டிருந்ததற்கு   எதிர்வினையாக    லிம்   இவ்வாறு  கூறினார்.

அன்னிய   முதலீட்டாளர்கள்   பினாங்கிலிருந்து   வெளியேறி   வருவதாகவும்  அவர்களுக்கு   அங்கு  முதலீடு   செய்வதில்  ஆர்வம்   போய்விட்டது    என்றும்   நஜிப்  கூறுவதை   லிம்  மறுத்தார்.

2008-2016  காலக்கட்டத்தில்      ரிம41,554 மில்லியன்  எப்டிஐ  பெற்று  ஜோகூர்,  சரவாக்கை   அடுத்து   பினாங்கு  மூன்றாவது   இடத்தில்   இருப்பதை  மலேசிய   தொழிலியல்   மேம்பாட்டு   நிறுவனம்  வெளியிட்டுள்ள    புள்ளிவிவரங்கள்   காண்பிப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“பினாங்கு   சிரமத்தில்  இருக்கிறது   என்றால்,  இதர   11  மாநிலங்களும்  இன்னும்  பெரிய  சிரமத்தில்  இருப்பதாகத்தான்   அர்த்தம்”,  என்றாரவர்.

பினாங்கைப்  பொருத்தவரை   அது   கூடுதல்   அன்னிய   நேரடி   முதலீட்டைப்  பெறுவதற்கு   கூட்டரசு    அரசாங்கத்துடன்    தொடர்ந்து   ஒத்துழைத்து   வரும்    என்றார்.