நஜிப்: இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டண உயர்வு இல்லை

indiaஇந்தியாவுக்குச்   செல்லும்  மலேசியர்களுக்கான  விசா   கட்டணம்   ரிம180-இலிருந்து   ரிம456ஆக   உயர்கிறது    என்று  கூறப்படுவதை   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கும்   மலேசியாவில்   உள்ள   இந்திய   தூதரகமும்   மறுத்துள்ளனர்.

“ஆறு-மாத   விசாவுக்கான   கட்டணம்   அதிகரிக்கப்படவில்லை.  இந்தியா  ஓராண்டு  விசா   என்ற  ஒன்றைத்   தனியே   உருவாக்கி  வருகிறது”,  என   இந்திய   வருகை   மேற்கொண்டிருக்கும்   நஜிப்    தெரிவித்தார்.

அதே  வேளையில், மலேசியா   வரும்   இந்திய   சுற்றுப்பயணிகள்   15  நாள்கள்   அல்லது   அதற்குக்  குறைவான   காலம்   இங்கு   தங்குவதாக  இருந்தால்   அவர்களுக்கு  விசா   தேவையில்லை   என்ற  மலேசியாவின்   புதிய  கொள்கையிலும்  மாற்றமில்லை   என்றாரவர்.

மலேசியாவுக்கான  இந்திய  தூதர்  டி.எஸ்.திருமூர்த்தியும்   விசா  கட்டணம்   அதிகரிக்கப்படுவதாகக்  கூறப்படுவதை   மறுத்தார். வேறொரு  விசா  தொடர்பாக   ஏற்பட்ட  குழப்பம்தான்  இச்சர்ச்சைக்குக்  காரணம்    என்றார்,

“ஆறு-மாத  சுற்றுலா  விசாவுக்கும்  மற்ற  வகை   விசாக்களுக்குமான   கட்டணத்தில்   மாற்றமில்லை.  ஓராண்டு   விசா   என்ற  ஒன்றைப்  புதிதாகக்  கொண்டு  வருகிறோம்”,  என்றவர்  புதுடில்லியில்   விளக்கினார்.

ஓராண்டு  விசாவைக்  கொண்டு  பன்முறை   இந்தியா  சென்று  வரலாம்.

மலேசியாவில்  உள்ள   இந்திய   வம்சாவளியினர்   இந்திய  அன்னிய  குடியுரிமை (ஒசிஐ)  அட்டைக்கு  விண்ணப்பிக்க   ஊக்குவிக்கப்படுவதாகவும்   திருமூர்த்தி    கூறினார்.  அதைக்  கொண்டு    ஒருவர்   வாழ்நாள்  முழுக்க   இந்தியாவுக்கு   எத்தனை  முறை   வேண்டுமானாலும்   சென்று  வரலாம்,  அங்கு  தங்கியும்   இருக்கலாம்    என்றாரவர்.