ஆலயத்தில் நடக்கப்போவது பிரார்த்தனை ஸாகிர்-எதிர்ப்புப் பேரணியல்ல- துணை முதலமைச்சர்

1ramasmyபினாங்கின்  இரண்டாவது    துணை முதலமைச்சர்   பி.இராமசாமி    இந்து    ஆலயமொன்றில்   ஏற்பாடு   செய்யப்பட்டிருக்கும்   நிகழ்வு   இஸ்லாமிய  சமய   போதகர்   ஸாகிர்   நாய்க்கு  எதிரான   பேரணி   என்று   கூறப்படுவதை  மறுத்தார்.

அது  இந்துக்களுக்கான   ஒரு  பிரார்த்தனைக்   கூட்டம்.  ஸாகிர்,   பெர்லிஸ்  முப்தி   முகம்மட்  அஸ்ரி    சைனுல்     அபிடின்   போன்றோரின்   பேச்சால்   மனம்   நொந்து  போயுள்ள   இந்துக்கள்  அதற்கு   ஏற்பாடு    செய்திருக்கிறார்கள்   என்று   பினாங்கு    இந்து   அற   வாரியத்   தலைவருமான   அவர்   கூறினார்.

“பிரார்த்தனையை    அடுத்து    கடந்த  சில    ஆண்டுகளாக    இந்து  சமயத்தைச்   சிறுமைப்படுத்தி   பேசி  வந்துள்ள   ஸாகிர்,  அஸ்ரி   போன்றோருக்கு     எதிராக   போலீஸ்   புகார்   செய்ய   சிலர்   திட்டமிட்டுள்ளனர்”,  என  இராமசாமி    சொன்னார்.

“ஏற்பாட்டாளர்கள்    நல்ல   நோக்கத்துடன்தான்   போலீஸ்   அனுமதியை    நாடியிருக்கிறார்கள்.

“பார்க்கப்போனால்   இதற்கு   போலீஸ்   அனுமதியே   தேவையில்லை”,  என்று   குறிப்பிட்ட    ராமசாமி    இந்துக்கள்   என்ன   செய்யலாம்    செய்யக்கூடாது     என்று   சொல்வது   போலீசின்   வேலை   அல்ல   என்றார்.

“ஸாகிரும்   அஸ்ரியும்   இந்துக்களுக்கு   எதிராக    என்ன   வேண்டுமானாலும்   சொல்லிக்கொள்ள   போலீஸ்   அனுமதிக்கும்போது   இந்துக்கள்   ஒரு  பிரார்த்தனைக்  கூட்டத்துக்கு   ஏற்பாடு   செய்வது   குறித்து  கருத்துச்  சொல்ல  அவர்களுக்கு   என்ன   உரிமை   இருக்கிறது?”,  என்றவர்   வினவினார்.

நேற்று  பெர்னாமா   செய்தி   ஒன்று,   இவ்வாரம்   ஞாயிற்றுக்கிழமை    பட்டர்வர்த்  இந்து    ஆலயமொன்றில்   இண்ட்ராப்   இயக்கம்    ஏற்பாடு   செய்துள்ள   ஸாகிர்- எதிர்ப்புப்   பேரணி   போலீசால்   இரத்துச்   செய்யப்பட்டிருப்பதாகக்  கூறிற்று.

அது  சட்டவிரோத  பேரணி   என்றும்  அது     2012  அமைதிப்பேரணிச்   சட்டத்தை  மீறுகிறது    என்றும்   வட  செபறாங்   பிறை     மாவட்ட  போலீஸ்   தலைவர்   ஏசிபி   அஸ்மி   ஆடம்   கூறினார்.

“அது   நாட்டில்   தேவையற்ற   இன,  சமயப்  பதற்றத்தை    ஏற்படுத்தலாம்”   என்பதால்   அதற்கு     அனுமதி   அளிக்க   போலீஸ்  மறுத்ததாக    அவர்  சொன்னார்.

மூன்று  மலாய்  முஸ்லிம்   என்ஜிஓ-கள்   செய்த   புகாரை   அடுத்து    அவர்  இவ்வாறு   கூறினார்.

இந்துக்கள்   பிரார்த்தனை   செய்யலாம்.  ஆனால்,  பேரணிக்கு  அனுமதி   இல்லை.  பேரணி   நடத்துவோருக்கு   எதிராக    நடவடிக்கை    எடுக்கப்படும்    என்று  போலீஸ்   கூறியது.  பேரணி   பற்றி   அறிவிக்கும்   மூன்று  பதாதைகளும்   அகற்றப்பட்டுள்ளன.

பேரணிக்குத்  தடை   விதித்த   போலீசார்  சில   முக்கியமான    விசயங்களைக்    கவனிக்கத்     தவறி   விட்டனர்  என   இராமசாமி   கூறினார்.

“பிரார்த்தனை   செய்வதும்   அதன்  பின்னர்   நாட்டில்    சமயங்களுக்கிடையில்   பதற்ற   நிலையை   உண்டுபண்ணியவர்களுக்கு    எதிராக   போலீசில்   புகார்   செய்வ தும்   குற்றமா?”,  என்றவர்   வினவினார்.

ஞாயிற்றுக்கிழமை   பிரார்த்தனைக்   கூட்டத்துக்கு   இண்ட்ராப்   ஏற்பாடு   செய்திருப்பதாகக்   கூறப்படுவதை   அவர்  மறுத்தார்.

அந்நிகழ்வை   ஏற்பாடு     செய்திருப்பவர்கள்   உள்ளூர்  இந்து    பெருமக்கள்.

நடப்பதோ  பிரார்த்தனைக்  கூட்டம்.  இங்கு  ஏன்  அமைதிப்  பேரணிச்   சட்டத்தைக்  கொண்டு  வருகிறார்கள்  என்றவர்   கேட்டார்.

ஞாயிற்றுக்கிழமை   ஏற்பாடு      பிரார்த்தனைக்கும்   ஒருமைப்பாட்டுக்கும்   ஏற்பாடு   செய்யப்பட்டுள்ள   கூட்டம்   அமைதியான   முறையில்    நடைபெறும்    என்று   தம்மிடம்   தெரிவிக்கப்பட்டிருப்பதாக    இராமசாமி   கூறினார். போலீசும்  மற்றவர்களும்   இதைப்   பெரிதுபடுத்த   வேண்டிய   அவசியமில்லை    என்றாரவர்.