எதிரணியினர் தங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண முடியாதிருப்பது கண்டு அதன் ஆதரவாளர்கள் வெறுப்படைந்துள்ளதாக பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹமட் கூறினார்.
“விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, 13வது பொதுத் தேர்தலில் நம்மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களில் பெரும்பகுதியினர் எதிர்க்கட்சிகளின் இப்போதைய நிலை கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர், ஆத்திரப்படுகின்றனர் அதிருப்தி கொண்டுள்ளனர்.
“எதிரணியாக இருந்து பழக்கப்பட்டு விட்டதால் கருத்துவேறுபாடுகளைப் பண்பட்ட முறையில் தீர்த்துக்கொள்ளும் வழிவகை தெரியவில்லை. இதனால், நாம் ஆளுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்ற தோற்றப்பாடு உருவாகி விட்டது”, என நிக் நஸ்மி கூறினார்.
இன்று ஷா ஆலமில் பிகேஆர் இளைஞர் காங்கிரசில் அவர் தம் கொள்கை உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிரணி 2015 தொடங்கி உள்சண்டையில் சிக்கிக் கிடக்கிறது என்றாரவர். அதில் ஆகக் கடைசியாக, பாஸ் பிகேஆருடன் உறவுகளை முறித்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.