பல தகிடுதத்தங்கள் செய்து அரசியலில் பெயர் போட முனைந்திருப்பவர் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ்.
அண்மையில் அவர் செகிஞ்சான் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அத்தொகுதியில் காலங்காலமாக மசீசதான் போட்டி போட்டு வந்துள்ளது.
ஜமால் சுங்கை புசார் மசீச இளைஞர் தலைவர் இங் பூன் கியோங் பெயரையும் அறிவித்தார், சுங்கை புசார் அம்னோ செயல்குழு உறுப்பினர் சமட் வகாப்பின் பெயரையும் அறிவித்தார்.
திங்கள்கிழமை சாபாக் பெர்னம் தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்துவைத்து உரையாற்றியபோது அந்த அறிவிப்பைச் செய்த ஜமால் அது மசீச தொகுதிதான் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், மூன்று தேர்தல்களில் மசீச அங்கு தோல்வி அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அவரது உரை அம்னோ அத்தொகுதியில் அக்கறை கொண்டிருப்பதைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து அம்னோ அத்தொகுதியை எடுத்துக்கொள்ளப் போகிறது என்ற வதந்தியும் உருவானது. வதந்திக்கு வலுச் சேர்ப்பதுபோல் இருந்தது மறுநாள் சுங்கை புசார் மசீச தலைவர் கெக் செங் ஹூய் கூறியதாக வெளிவந்த ஒரு செய்தி.
கெக், மசீசதான் அத்தொகுதியில் போட்டியிடும் என்றும் ஆனால், அம்னோவால் வெல்ல முடியும் என்றால், அதை அம்னோவுக்கே விட்டுக்கொடுக்க மசீச தயார் என்றும் கூறியதாக சினார் ஹரியான் செய்தி குறிப்பிட்டது.
கெக்கை மலேசியாகினி தொடர்புகொண்டு பேசியபோது தாம் அவ்வாறு கூறவில்லை என்றும் மசீச அத்தொகுதியை விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார்.
செகிஞ்சானில் யார் வேட்பாளர் என்பதை பிஎன் உச்சமன்றம்தான் முடிவு செய்யும் என்று மட்டுமே தாம் கூறியதாக கெக் விளக்கினார்.
“செகிஞ்சான் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வேட்பாளரின் பெயரை ஏற்கனவே மசீச தலைமையிடம் கொடுத்து விட்டோம்”, என்றாரவர்.