ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் பற்றிய பகிரங்க விவாத்தை முகைதின் எதிர்க்கிறார்

 
muhyddinagaingstபிரதமர் பதவிக்கான ஹரப்பான் வேட்பாளர் பற்றிய விவாதம் இரகசியமாக நடத்தப்பட வேண்டும் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார்.

“இதைப் பகிரங்கமாக விவாதிக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து, ஏனென்றால் அது தவறான புரிந்துணர்வுக்கும் குழப்பத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும்.

“நாம் ஒன்றுபட்டிருக்கவில்லை என்ற தோன்றத்தை இது அளிக்கும்…இதை நமக்குள்ளே விவாதிப்பது நல்லதாக இருக்கும். கசிவுகள் இருக்கக்கூடாது”, என்று பெட்டாலிங் ஜெயாவில் பெர்சத்து தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முகைதின் கூறினார்.

ஹரப்பான் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது குறித்து இன்னும் ஒருமித்த நிலை காணப்படாதது பற்றி கேட்ட போது முகைதின் இவ்வாறு பதில் அளித்தார்.

இது வரையில், பிகேஆர், அமனா மற்றும் டிஎபி ஆகியவை அன்வார் இப்ராகிம்மை பிரதமர் வேட்பாளராக ஆதரித்துள்ளன. ஆனால், பெர்சத்து அவ்வாறு செய்யவில்லை.

பெர்சத்துவின் தலைவர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அன்வார் தலைமை ஏற்பதற்கு சில சட்டத் தடங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மாறாக, பிரதமர் பதவிக்கு முகைதின் அல்லது மகாதிர் முன்மொழியப்படுவதை சில பெர்சத்து தலைவர்கள் விரும்புகிறார்கள்.

கூட்டணி பங்காளிகள் ஒப்புக்கொண்டால் தாம் மீண்டும் பிரதமராக ஒப்புக்கொள்ளக்கூடும் என்று மகாதிர் தெரிவித்துள்ளார்.