14 ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் உடன்படிக்கை ஏதும் இல்லாத நிலையில், பக்காத்தான் ஹரப்பானுக்கு பி.எஸ்.எம் அதன் இடங்களை விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம். 20 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அதன் வேட்பாளார்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஒருவேளை, பக்காத்தான் தேர்தல் உடன்பாட்டிற்கு ஒத்துவரவில்லை என்றால், கிட்டத்தட்ட இவ்வனைத்து தொகுதிகளிலும் பாரிசான், பக்காத்தானோடு பி.எஸ்.எம். மும்முனை போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ.சிவராஜன் தெரிவித்தார்
“பக்காத்தானுடன் நட்பாக இருக்க வேண்டும் எனும் எண்ணத்தை நாங்கள் பலமுறை வெளிபடுத்தியுள்ளோம். ஆனால், அவர்களிடம் அப்படியொரு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் நாங்கள் இன்னும் பக்காத்தானுடன் நட்புறவாடினாலும், தேர்தல் அடிப்படையில், அவர்கள் போட்டியிட்டால், நாங்களும் நிச்சயம் அவர்களை எதிர்த்து போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சியின் வாக்குகள் பிளவுபட்டு துரதிஷ்டவசமாக பாரிசானுக்கு நன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதையும் அவர் மறுக்கவில்லை. ஆனால், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; வாக்காளர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்பது “சாதாரண ஜனநாயக செயல்முறை” என அவர் சொன்னார்.
பாரிசான், பக்காத்தான் ஹராப்பான் போன்ற பெரிய, கூட்டுக் கட்சிகளுடன் மும்முனை போட்டியைச் சந்திக்கும் போது ‘தோல்வி’ முகமே அதிகம் உள்ளது என்ற கூற்றுக்கு, “நீண்ட காலமாக வேலை செய்த, குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பி.எஸ்.எம். தேர்ந்தெடுத்துள்ளது. ஆக, அந்த இடங்களில் எங்களால் நல்லதொரு போட்டியை வழங்க முடியும்”, என சிவராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
கடைசி நிமிடம் வரை காத்திருக்க முடியாது
கடந்த காலங்களில், ‘பக்காத்தான் ரக்யாட்’ என அழைக்கப்பட்ட எதிர்க்கட்சி கூட்டணியுடன் செய்துகொண்ட தேர்தல் உடன்படிக்கைகள், ஒரு துன்பகரமான வரலாறாகவே அமைந்தது என 2013 இல், பி.எஸ்.எம். போட்டியிட்ட இடங்களில் அதன் வேட்பாளர்களை நிறுத்திய அந்த எதிர்க்கட்சி கூட்டணியை சிவராஜன் நினைவு கூர்ந்தார்.
தேர்தலுக்குப் பின்னர் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில், இனி பக்காத்தானுடன் கூட்டு வைக்கப் போவதில்லை எனவும், 14 ஆவது பொதுத்தேர்தலில் தங்கள் கட்சியின் கைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனவும் பேராளர்களால் முடிவு செய்யப்பட்டதாக சிவராஜன் தெரிவித்தார். மோசமான அனுபவம் மற்றும் கட்சிகளுக்கிடையிலான கொள்கை வேறுபாடுகளே இதற்கு காரணம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க, பக்காத்தானோடு கைக்கோர்க்க நாங்கள் எப்போதுமே தயார். ஆனால், அவர்களுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை”, என சிவராஜன் திட்டவட்டமாகக் கூறினார்.
‘கடந்தாண்டு, பக்காத்தான் புதியதொரு கட்சிக்குத் தங்கள் கூட்டணியில் இடமளித்து, பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அப்பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை. ஆக, நேரடி போட்டிக்கு வழிவிடும் வகையில், பேச்சுவார்த்தை நடத்த பக்காத்தான் எண்ணம் கொண்டிருக்கவில்லை”, என்றாவர்.
‘பாரிசான் ஆட்சியைக் கவிழ்த்து, மாற்று அரசாங்கம் உருவாக்கத் திட்டமிடும் எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் எங்களைப் போன்ற சிறு கட்சிகளை அணுக வேண்டும். மாறாக, நாங்கள் அவர்களிடம் சென்று கையேந்த முடியாது; பி.எஸ்.எம். ஒருபோதும் அதைச் செய்யாது. எங்களுக்கும் தேர்தல் பணிகள் உண்டு. ஆக, நாங்கள் கடைசி நேரம்வரை அவர்களின் அழைப்பிற்காகக் காத்திருக்க முடியாது”, என சிவராஜன் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.
பாஸ் கட்சியுடன் கூட்டு இல்லை
“பி.எஸ்.எம், பாஸ் கட்சியுடன் எந்தக் கூட்டணியையும் உருவாக்கப்போவதில்லை. சோசலிச இடதுசாரிக் கட்சியாக இருக்கும் எங்களால், மத அடிப்படையிலான கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாது”, என அவ்விரு கட்சிகளுக்கிடையிலான கருத்தியல் இடைவெளியை சிவராஜன் சுட்டிக்காட்டினார்.
மேலும், ” ‘எதிரியின் எதிரி நண்பன்’ எனும் கூற்று இங்கு மக்களின் பிரச்சனையைத் தீர்க்க உதவாது. அதனால்தான், பக்காத்தான் மகாதீரை தங்களோடு இணைத்துக் கொண்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புமேயன்றி ஒரு தீர்வைக் கொண்டு வராது”, என்று சிவராஜன் அப்பேட்டியின் போது கூறினார்.
நாற்காலியே இல்லாதவன் எப்படியப்பா பகிர்வது ? இது எப்படி இருக்கிறன : கல்யாணமே ஆகலையாம் , ஆனா கூறுகெட்ட கெழவி அரச மரத்த சுத்தினாளாம் !