ஜைட்: ஹராபான் கட்சிகள் பெர்சத்துவைத் தலைமை தாங்க வைப்பதே புத்திசாலித்தனம்

harapanபக்கத்தான்  ஹராபான்  கட்சிகள்  எதிரணிக்   கூட்டணிக்குத்    தலைமையேற்கும்  பொறுப்பை   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)விடம்   ஒப்படைப்பதே   “நடைமுறைக்கு  உகந்ததும்   புத்திசாலித்தனமுமாகும்”   என்கிறார்   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்.

பிகேஆர், டிஏபி,  அமனா   ஆகியவை  புத்திசாலித்தனமாக    நடந்துகொண்டு  தலைமைப்  பொறுப்பை    பெர்சத்துவிடம்   ஒப்படைத்தால்  14வது   பொதுத்   தேர்தலில்   வெற்றிபெறலாம்.  இல்லையேல்  தன்னிரக்கம்  கொண்டு   வருந்த   வேண்டிய  நிலை   உருவாகலாம்   என்றாரவர்.

இப்போது   டிஏபி  உறுப்பினராகவுள்ள   ஜைட்,      கூட்டணியின்   நிர்வாகத்    தலைவராக   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டும்    தலைவராக   முகைதின்   யாசினும்   நியமிக்கப்பட்டு    அன்வார்  இப்ராகிமை   ஆலோசகராக   நியமிக்கலாம்    என   பெர்சத்து   முன்வைத்துள்ள   பரிந்துரை   குறித்து    கருத்துரைத்தார்.

பெர்சத்துவின்   பரிந்துரையின்படி   அன்வாரின்  துணைவியாரும்   பிகேஆர்  தலைவருமான    டாக்டர்   வான்   அசிசா  வான்  இஸ்மாயில்     துணை  நிர்வாகத்    தலைவராகவும்   பிகேஆர்   துணைத்   தலைவர்    அஸ்மின்  அலி   துணைத்   தலைவராகவும்  நியமிக்கப்படுவார்கள்.

டிஏபி   பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்கும்   அமனா    தலைவர்    முகம்மட்   சாபுவும்    உதவித்   தலைவர்கள்.

இப்பரிந்துரை   இன்றைய    ஹராபான்   தலைவர்  மன்றக்  கூட்டத்தில்   விவாதிக்கப்படும்   என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஹராபான்   அடுத்த   பொதுத்   தேர்தலுக்கு   முன்னதாக    தன்னை  முறையான   கூட்டணியாக    பதிவு    செய்துகொள்ள   திட்டமிடுகிறது.

இதனிடையே,  கடந்த   சில    வாரங்களாக   ஹராபான்   தேர்தலில்   வெற்றிபெற்றால்    பிரதமராக    யாரை   நியமிப்பது    என்ற   விவகாரம்     கூட்டணித்    தலைவர்களிடையே  காரசாரமான   விவாதத்துக்கு   இலக்காகியுள்ளது.

மகாதிரும்,   ஹராபான்   விரும்பினால்   மீண்டும்   பிரதமர்    ஆவது  குறித்து    தாம்  பரிசீலிக்கக்கூடும்     என்று   கூறி   ஒரு  பரபரப்பை   ஏற்படுத்தினார்.
அன்வாரைப்  பொறுத்தவரை,   எந்த  முடிவெடுத்தாலும்   அது   அனைத்துக்  கட்சிகளும்   ஏற்றுக்கொள்ளும்   முடிவாக   இருத்தல்    வேண்டும்    என்று   வலியுறுத்தினார்.

கடந்த  மாதம்    பிகேஆர்    ஆண்டுக்  கூட்டத்தில்,  பிகேஆர்    தலைவர்களும்,  லிம்மும்,    முகம்மட்    சாபுவும்   சிறையில்   உள்ள   அன்வார்   இப்ராகிம்தான்    அடுத்த   பிரதமர்    என்று   கூறும்    அறிவிப்புப்   பலகைகளை   ஏந்தி   நின்றனர்.