புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவுபெறும்?, வட்டாரப் பொதுமக்கள் கேள்வி

 

 

bukit indah - tamil schoolஇன்று காலை, புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்து, வட்டார அரசுசார இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

ஜொகூர், ஸ்கூடாயிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் கடந்த செப்டம்பர் 15, 2014 இல் தொடங்கப்பட்டது. அட்டவணைப்படி 2016, மார்ச் 15 இல் கட்டிமுடிக்கப்பட்டிருக்க வேண்டிய இப்பள்ளி கட்டடம் இன்னும் இழுபறியாக உள்ளது.

அரசாங்கம் உறுதியளித்தப்படி, 2016 மார்ச் 15 இல், பள்ளி கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில காரணங்களைக் கூறி, 2016 டிசம்பரில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும், டிசம்பர் 30, 2016 இல், பள்ளியின் வாரியக் குழுத் துணைத் தலைவர் பி.சுரேஸ்ராவ், பள்ளியின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமை பெறாததால், பள்ளி ஜூன் 2017இல் திறக்கப்படுமென ஒரு பத்திரிக்கை அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

பள்ளியின் கட்டுமானத்திற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய கல்வி அமைச்சு, பொதுப் பணித்துறை அமைச்சு போன்றவை இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வழங்காத சூழ்நிலையில், இன்று பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்

“இது ஒன்றும் ‘பெருந்திட்டம் அல்ல’ (Mega Project) இன்னும் பல ஆண்டுகளைக் கழிப்பதற்கு. பல போராட்டங்களுக்கு மத்தியில்

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

தொடங்கப்பட்ட இப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதற்கான முறையான காரணத்தை அரசாங்கமோ அல்லது துணைக் கல்வியமைச்சர் கமலநாதனோ வழங்க வேண்டும்; அதைவிடுத்து, வாரியக் குழுவினர் விளக்கமளிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது”, என இம்மறியலுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதற்கிடையே, பள்ளியின் வாரியக் குழுவைச் சேர்ந்த திரு கணேசன், இன்று காலை பள்ளியின் முன் ஒன்றுதிரண்ட மக்களுக்கு விளக்கமளிக்க வந்திருந்தார். ‘தொடர் மழை போன்ற ஒருசில காரணங்களால் பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்துள்ளது. ஆனால், பணிகள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. குத்தகையாளர்களின் மெத்தனப்போக்கும் இதற்கு ஒரு காரணம். இதில் அரசாங்கத்தின் தவறு ஏதுமில்லை. இந்த மறியல் தேவையற்ற ஒன்று. எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காக மக்களை ஏவிவிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்”,’ எனத் தமது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

மேலும், ‘பள்ளிக்கு முதலில் ஒதுக்கப்பட்ட 3 ஏக்கர் நிலம், எதிர்க்கட்சியினரின் போராட்டத்தினாலேயே 6 ஏக்கராக மாறியது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இல்லாத பிரச்சனைக்கெல்லாம் மறியலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”, என அவர் கூறினார்.

கணேசன் விளக்கமளிக்கிறார்
கணேசன் விளக்கமளிக்கிறார்

இப்பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கிய திரு அன்னியப்பன் அவர்களையும், அதற்கான முதல் கோரிக்கை மனுவை தயாரித்த ஜொகூர் செம்பருத்தி தோழர்களையும், கணேசன் தனது உரையின் போது, நினைவுகூர்ந்தார்.

“இதில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை. பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமானதற்கான காரணம் அறியவே நாங்கள் இங்கு வந்தோம். இவ்வட்டார இளைஞர்கள் இப்பள்ளிக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதை நாங்கள் அறிவோம். ஆக, அவர்களுக்கு எதிராக எதையும் செய்வது எங்கள் நோக்கமல்ல. மாறாக, இவர்களை ஏவிவிட்டு, பின்னால் நின்று குளிர்காயும் ஆளும் அரசாங்கத்தின் மீதே எங்களுக்குக் கோபம். ஏன் அவர்கள் இதுவரை, இப்பள்ளி நிர்மாணிப்பின் தாமதம் குறித்து வாய் திறக்கவில்லை? அவர்களின் பதில் அறியவே இம்மறியல். மாறாக, வாரியக் குழுவினருக்கு எதிர்ப்பாக அல்ல. பள்ளியின் மீது கொண்ட அக்கறையின் காரணமே நாங்கள் இங்கு கூடினோம். போராட்டம் மக்களின் உரிமை, அதை யாரும் தடுக்கக்கூடாது”, என்று பி.எஸ்.எம். கட்சி பிரதிநிதி திரு மோகன் தெரிவித்தார்.

‘பள்ளியின் கட்டுமானப் பணிகள் விரைவில் முழுமையடைந்து, வருகின்ற கல்வியாண்டில்20170610_111042 புதியப் பள்ளி தொடங்கப்பட வேண்டும். இல்லையேல், மீண்டும் ஒரு போராட்டத்திற்கு மக்களைத் திரட்டுவோம்”, என்று திரு சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்தார்..

மாணவர் எண்ணிக்கை சரிவு காரணமாக, தங்காக் புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு, புக்கிட் இண்டாவிற்கு மாற்றி கொண்டுவரப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய மறியலில், வட்டாரப் பொதுமக்களோடு ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ம.திராவிடர் கழகம், ஶ்ரீ ஓர்கிட் முத்துக்கருப்பன் ஆலயப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜசெக, பி.எஸ்.எம்., பிகேஆர் கட்சிப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு மறியலுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.