நீதிமன்ற வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்கும்படி மலேசியாவின் தலைமை நீதிபதி உத்தரவிடுவது வழக்கமானது என்று வழக்குரைஞர்களில் சிலர் கூறுகின்றனர்.
“ஆம், அவர் அவ்வாறு செய்கிறார், கிரிமினல் வழக்குகள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குக்களில்கூட”, என்று வழக்குரைஞர் பல்ஜிட் சிங் சிது இன்று தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறுவரைவு சம்பந்தப்பட்ட இரு வழக்குகள் தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப்பின் நேரடி உத்தரவின்கீழ் விரைவுபடுத்தப்பட்டுள்ளது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசும் மலாக்காவாசிகளும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கு தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி ஜூன் 20 இல் விசாரணைக்கு வருகிறது என்று பெர்சே கூறுக்கொண்டது.
முக்கியமான பொதுநலன் வ்ழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றாலும் தயார் செய்வதற்கு வழக்குரைஞர்களுக்குப் போதிய நேரம் அளிக்கப்பட வேண்டும் என்று பல்ஜிட் கூறினார்.
“அவசரப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்…ஐந்து நாள் நகைப்புக்குரியது, எவ்வளவுதான் விரைவுபடுத்த அவர்கள் விரும்பினாலும், அவர்கள் அனைத்துத் தரப்பினருக்கும் (தயார் செய்துகொள்வதற்கு) நியாயமான நேரம் கொடுக்க வேண்டும்”, என்று பல்ஜிட் மேலும் கூறினர்.
பல்ஜிட் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட சக வழக்குரைஞர் நியு சின் யு, தொகுதி எல்லை மறுநிர்ணய நடவடிக்கை மிக முக்கியமானது. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார்.
ஆனால், வழக்குரைஞர்களுக்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவரும் வலியுறுத்தினார்.