சரவாக் ரிப்போர்ட் பொய்களை மட்டுமே வெளியிடும் ஒரு வலைத்தளம் என்றால் அதை நினைத்து அஞ்சுவானேன்? அதைத் தடுப்பது ஏன்?
சிப்பாங் எம்பி முகம்மட் ஹனிபா அவரது முகநூலில் இவ்வாறு வினவியுள்ளார்.
அந்த வலைத்தளத்தில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அமைச்சரை நினைத்தால் “பரிதாபமாக” இருக்கிறது என்று ஹனிபா குறிப்பிட்டார். அமைச்சரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
நம்ப வேண்டாம் என்றால் சரவாக் ரிப்போர்ட் நம்பத்தக்க செய்தித்தளம் அல்ல என்பதுதான் பொருள். ஒரு நம்பத்தகாத செய்தித்தளத்தில் வெளிவரும் செய்திகளா ஒரு கொள்ளைக்கார அரசாங்கத்தை அசைத்து விடப் போகிறது? என்றவர் வினவினார்.
“அப்படியிருக்க அதை எண்ணி அச்சம் கொள்ளவோ மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் மூலமாக அதற்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமோ இல்லையே”, என்று ஹனிபா கூறினார்.