வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. இப்போதுள்ள சட்டங்கள், வழிகாட்டும் விதிமுறைகள், இரு தரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனவாம்.
“கட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை. இப்போதுள்ளவை வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுக்கவில்லை”, என எம். இராமசெல்வம் நேற்று வழக்குரைஞர் மன்றச் செயலகத்தில் நடைபெற்ற வீட்டுப் பணிப்பெண்கள் மீதான ஆலோசனைக் கூட்டத்தில் கூறினார்.
இராமசெல்வம், கடந்த 11 ஆண்டுகளாக வழக்குரைஞர் மன்றத்தின் குடியேறிகள், அகதிகள் விவகாரக் குழு (எம்ஆர்ஐஏசி)த் தலைவராக இருந்து வருகிறார்.
அக்கூட்டத்தில், மனித வள அமைச்சு, மலேசிய மனித உரிமைக் கழகம்( சுஹாகாம்), உள்ளூர், அனைத்துலக தொழிலாளர் உரிமை என்ஜிஒ-கள், வழக்குரைஞர் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து கடந்த மே மாதம் மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரயோட் ஜயெம் வெளியிட்ட “வெளிநாட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு வைத்துள்ளவர்களுக்கு வழிகாட்டிகளும் ஆலோசனைகளும்” என்னும் நூலை அலசி ஆராய்ந்தன.
அமைச்சைப் பிரதிநிதித்து தொழிலாளர்துறை உதவி இயக்குனர் மதஞ்சிட் சிங் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த 71-பக்க நூல் ஆங்கிலத்திலும் மலாயிலும் வெளியிடப்பட்டுள்ளது.