ஜூல்பர்ஹான் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் மீண்டும் கல்வியைத் தொடரலாம், கல்வி அமைச்சர் கூறுகிறார்

சுல்1-225x300மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழத்தைச் (யூ.பி.என்.எம்.) சார்ந்த மாணவர் ஜூல்பர்ஹான் ஒஸ்மான் ஷூல்கர்னாய்ன் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவர்கள் 13 பேரும் ஜாமினில் விடுதலையானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார்.

 அப்பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு, கடற்படை பிரிவு மாணவரான ஜூல்பர்ஹான், முதலாம் ஆண்டு மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, உடல்முழுக்க 80% தீப்புண் காயங்களுக்கு இலக்காகி, கடந்த ஜூன் 1-ம் தேதி, செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவருக்கு மரணம் விளைவித்த காரணத்திற்காக யூ.பி.என்.எம்.-ஐ சார்ந்த 34 மாணவர்களும்  இவர்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதற்காக 4 தேசிய எரிசக்தி பல்கலைக்கழக மாணவர்களும் விசாரணைக்காக ஜூன் 1 முதல் தடுத்து வைக்கப்பட்டனர்.

“ஆகஸ்ட் 14-ல், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்வரை, அவர்கள் தங்கள் படிப்பைத் தொடரலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது”, என இட்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அந்த 13 பேரின் நலன் கருதி, அவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் தொடர்ந்து வழங்கப்படும். Slide1நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை  அவர்கள் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களாகவே நடத்தப்படுவர்”, எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மடிக்கணினி ஒன்றைத் திருடிவிட்டார் எனும் சந்தேகத்தின் பேரில், கடந்த மே 13 முதல், ஜூல்பர்ஹான் அந்த மாணவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வந்துள்ளார். மே 27 இல், அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அம்மாணவர்கள் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் உடல்நிலையில் எந்தவொரு மாற்றமும் காணப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, மே 31 இல், பாங்கியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிறுப்புக்கு ஓய்வு பெற ஜூல்பர்ஹான் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜூன் 1 இல், அவர் இறந்துவிட்டதாக செர்டாங் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையே, ஜூல்பர்ஹான் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க தாங்கள் பொறுப்பேற்பதாக மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் கூறியது. மலேசிய ஆயுதப் படையின் கீழ்  இந்த இராணுவ அகாடமி இருப்பதால் இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தங்களால் வெளியிட முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சும் பாதுகாப்புத்துறை அமைச்சும் கூட்டாக இதன் புலன் விசாரணையை மேற்கொள்ளும் வேளை,    பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹூசேன் இச்சம்பவம் குறித்த விவரங்களைத் தனக்கு உடனுக்குடன் தெரிவிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.