பெயர் கூறப்படாத “மலேசியன் அதிகாரி1 இன் (எம்ஒ1) மனைவிக்கு வழங்கப்பட்ட யுஎஸ்$22.3 மில்லியன் மதிப்புடைய 22 – காரட் இளஞ்சிவப்பு இருதய வடிவிலான வைரம் அமெரிக்கா அம்பலப்படுத்திய 1எம்டிபி பற்றிய விபரங்களில் ஒன்றாகும். இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இளஞ்சிவப்பு வைரம் மற்றும் யுஎஸ்$1.3 மில்லியன் மதிப்பிலான 27 வெவ்வேறு விதமான 18 காரட் தங்க கழுத்து மாலை மற்றும் வளையல்கள் திருடப்பட்ட 1எம்டிபி பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்த போதிலும், அவை தற்போது அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) வெளியிட்டிருக்கும் பறிமுதல் செய்யப்பட வேண்டிய பொருள்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
கடந்த வியாழக்கிழமை டிஒஜே தாக்கல் செய்த 251 பக்க சிவில் பறிமுதல்கள் வழக்கில் அந்த இலாகா கைப்பற்ற விரும்பிய 16 பொருள்களின் பட்டியலைச் சோதனை செய்ததில் அதில் திருமதி எம்ஒ1இன் இளஞ்சிவப்பு வைரமோ இதர தங்க நகைகளோ குறிப்படவில்லை.
அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள “பேஷன்” பொருள்கள் பினாங்கில் பிறந்த தொழிலதிபர் ஜோ லோ அவரது தாயாருக்கும் ஆஸ்திரேலிய மோடல் அழகி மிரண்டா கெர்க்கும் வாங்கியவையாகும்.
தவறான முறையில் பெறப்பட்டதாக கூறப்படும் பணத்தைப் பயன்படுத்தி எம்ஒ1 இன் மனைவிக்கு ஜோ லோ வாங்கியதாக டிஒஜே கூறியிருக்கையில் அதைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஏன் டிஒஜே இறங்கவில்லை என்பது புதிராக இருக்கிறது.