பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசினுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்ம்மீதும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர்மீதும் குறை சொல்லத் தகுதி இல்லை என்கிறார் சிறப்பு விவகாரத்துறை தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி.
முகைதின் ஒரு கண்ணியவான்போல் “நடிப்பது” இருக்கட்டும், முதலில் அவர் மணமான ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைப் பொய்யென்று நிறுவி அவரது குடும்பத்தின் சொத்துகள் எங்கிருந்து வந்தன ஏன்பதை விளக்குவாரா என்று முகம்மட் புவாட் வினவினார்.
“கபடப்பேச்சு வேண்டாம், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அனைவருமே அறிவர்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முகைதின் நிகா கீ சியு ஈ என்னும் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அப்பெண்னின் முன்னாள் கணவர் ஸ்டேன்லி கிளமெண்ட் ஆகஸ்டினே குற்றஞ்சாட்டியுள்ளார். ஆகஸ்டின் இரண்டு சத்திய பிரமாணங்களில் அதைத் தெளிவாகக் கூறியுள்ளார் என வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் அவரது வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், முகைதின் இக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். தம் எதிரிகள் அவர்களின் அரசியல் நலம் காக்க இப்படிப்பட்ட கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்கிறார் அவர்.