ஃபோரெக்ஸ் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) மகாதீர் மற்றும் அன்வார் இருவரையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதா? என்பதனைச் சம்பந்தப்பட்ட அவ்விரண்டு தலைவர்களின் வழக்குரைஞர்களும் உறுதிபடுத்திகொள்ள முனைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அந்த இருவரையும், ஆர்சிஐ அழைக்க விரும்புகிறதா என்று, இன்னும் தங்களுக்குத் தெரியவில்லை என டாக்டர் மகாதீரின் வழக்குரைஞர் முகமட் ஹானிஃப் கத்ரி அப்துல்லா கூறினார்.
1980 -களின் பிற்பகுதியிலும், 1990 -களின் தொடக்கக் காலத்திலும் வெளிநாட்டு நாணய வர்த்தக ஊழல் நடந்தபோது, டாக்டர் மகாதிர் மற்றும் அன்வார் அரசாங்கத்தில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார்கள்.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் அதனை உறுதிபடுத்த மறுத்துவிட்டனர். அது ஆர்சிஐ-யின் முடிவு என்று அவர்கள் கூறியதால், அடுத்த அமர்வுகளில் நாங்கள் ஆர்சிஐ-யிடமே டாக்டர் மகாதிர் ‘கலந்துகொள்ள வேண்டுமா, இல்லையா’ என்பதைத் தெளிவாகக் கூறும்படி கேட்டுக்கொள்வோம்,” என்று ஹனிஃப் கத்ரி தெரிவித்தார்.
“ஆர்சிஐ என் வாடிக்கையாளரின் விருப்பம் அல்ல, சாட்சிக்கு யார் யாரை அழைக்க வேண்டுமென்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அழைத்தால், மகாதீர் வருவார்,” என்றும் ஹனிஃப் கத்ரி கூறினார்.
“எங்களிடம் அறிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். திடீரென எங்களை விசாரணைக்கு அழைக்க முடியாது. நேர்மையான, வெளிப்படையான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அன்வாரின் வழக்குரைஞர் குர்டியல் சிங் நிஜார் தெரிவித்தார்.