பாஸுடன் ஒத்துழைப்பு, முடிவெடுக்க நஜிப்புக்கு முழு அதிகாரம்

நஜிப் - ஹடிஎதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உடன் ஒத்துழைக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதன் தலைவர் நஜிப்பிடம் விட்டுவிட அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளதாக அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார்.

“உச்சமன்றத்தின் கூற்றுப்படி, ஒத்துழைப்பு என்றால் ஒரு நோக்கம், புலம், முறை உள்ளது. தளர்வான முறையில் ஒத்துழைக்க முடியாது…. ஒத்துழைப்பு என்றால் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு எனப் பலவற்றை நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது,” என்று அவர் கோல திரெங்கானுவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, 14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு ஏதுமில்லை என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சபை முடிவெடுத்தது குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்றுவரை, பாஸுடன் அம்னோ ஒத்துழைக்கக் கூடாது என்று நாம் முடிவெடுத்ததில்லை. மக்களுக்கு நன்மை எனும் அடிப்படையில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமாயின், நாம் அவர்களுடன் ஒத்துழைக்கவே வேண்டும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்திகள் கூறுகின்றன.