டிஎபி சீனர்கள் கட்சியா?, “இல்லை”, லிம் கிட் சியாங் கூறுகிறார்

 

Kitdapnotchinesepartyஜோகூர் பாரு நகரின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் – ஜொகூர் பாரு, பாசிர் கூடாங் மற்றும் தெர்பாவ் – ஒன்றைப் பெருவதற்கு டிஎபி இனத்தைப் பயன்படுத்துகிறது என்ற கூற்று தவறானது என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

தெர்பாவ் தொகுதி பிகேஆர் தலைவர் ஸ்டீவன் சோங் டிஎபி அத்தொகுதியில் எந்த சேவையும் ஆற்றவில்லை என்றும், சீனர்கள் பெரும்பான்மையில் இருக்கும் தொகுதியை  டிஎபி ஒரு சீனர்கள் கட்சி என்பதால் அதனிடம் கொடுத்துவிட வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

பிகேஆர் 2013 ஆம் ஆண்டில் அம்மூன்று தொகுதிகளிலும் பிஎன்னுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.

ஸ்டீவனின் மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் “இல்லை” என்பதாகும் என்று கிட் சியாங் கூறினார்.

டிஎபி ஒரு சீனர்கள் கட்சியா? இல்லை.

டிஎபி ஒரு சீனர் கட்சி என்பதால், சீனர்கள் பெரும்பான்மையில் இருக்கும் தொகுதிகள் டிஎபிக்கு கொடுக்கப்பட வேண்டுமா? இல்லை.

ஜொகூர் பாருவின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சீனர்கள் பெரும்பான்மையில் இருக்கின்றனரா? இல்லை, என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

குறிப்பிடப்பட்ட அந்த மூன்று தொகுதிகளின் வாக்காளர்களின் பட்டியலை மேற்கோள் காட்டி, அம்மூன்று தொகுதிகளிலும் பெரும்பான்மையிலிருப்பவர்கள் மலாய்க்காரர்கள் என்று அவர் தெரிவித்தார்.

டிஎபிக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் அம்னோ அல்லது பிஎன்னிடமிருந்து வந்தால், அது புரிந்துகொள்ளக்கூடியது என்று கூறிய அவர், அது ஹரப்பான் கூட்டணி உறுப்புக் கட்சியிடமிருந்து வரக்கூடாது என்றாரவர்.

எனினும், இன்றையச் சூழ்நிலையில் இது போன்ற தவறை தாம் மன்னிக்கத் தயாராக இருப்பதாக கிட் சியாங் மேலும் கூறினார்.