சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதால், நாட்டின் இறையாண்மையைச் சீனாவிடம் விற்றுவிட்டதாகக் குறை கூறும் எதிர்க்கட்சியினரின் போக்கை, பிரதமர் நஜிப் ரஷாக் சாடினார்.
“80-களில், அப்போதையப் பிரதமரால் , ‘கிழக்கை நோக்கும் திட்டம்’ அறிமுகமான போது, நாட்டின் இறையாண்மை ஜப்பான் மற்றும் கொரியாவிடம் விற்கப்பட்டுவிட்டது என யாரும் கூக்குரல் இடவில்லையே ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“இன்று நான் சீனாவுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதால், நான் நாட்டின் இறையாண்மையைச் சீனாவிடம் விற்றுவிட்டேன் என, ஏன் குற்றம் சுமத்த வேண்டும்,” என, இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ‘மலேசியச் சீனர்கள் தேசப்பற்று பேரணி’ எனும் நிகழ்வில் உரையாற்றிய நஜிப் கூறினார்.
சீனாவுடன் ஏற்பட்டுள்ள நட்பு, நாட்டிற்கு நன்மை பயக்கும் பல முதலீடுகளைக் கொண்டுவந்துள்ளதாக அவர் கூறினார்.
உலகின் அனைத்து நாடுகளுடனும் மலேசியா நட்பு வைத்திருக்கலாம், ஆனால், அது நாட்டின் இறையாண்மையை அடகு வைப்பதாக அர்த்தம் அல்ல, என்று பிரதமர் வலியுறுத்தினார்.
“நாம் அனைத்து நாடுகளுடனும் நட்பாக இருக்க வேண்டும், ஆனால், நம் கோட்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும் … நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது,” என்றும் அவர் கூறினார்.
உண்மையில், மற்ற நாடுகளுடன் இருதரப்பு உறவுகள், நம் நாட்டிற்கு நன்மையையேக் கொண்டு வந்துள்ளன என்றார் நஜிப்.
இவ்வாரத் தொடக்கத்தில், வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்முடனான சந்திப்பு குறித்து பேசுகையில், டிரம்ப்பிடமிருந்து தமக்குப் பெரியதொரு வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.
சீன அதிபர் – ஷி ஜின்பிங், சவூதி அரேபியாவின் மன்னர் – ராஜா சல்மான் அப்துலஜிஸ் அல் சவுத் மற்றும் டிரம்ப் ஆகிய மூன்று உலக வல்லரசுகளின் தலைவர்களுடன் மலேசியா நல்ல உறவு வைத்திருப்பதாக நஜிப் மேலும் தெரிவித்தார். – பெர்னாமா