’பெண்ணுரிமைக்குப் போராட ஊக்கமளித்தவர் துங்கு’

இராசம்மா,  வயது  90.  வீட்டை   அழகாக  வைத்துள்ளார்.  இயற்கை   வெளிச்சம்   இருக்கும்படி   வடிவமைக்கப்பட்ட   வீடு. வீட்டுக்குள்  எங்கு  பார்த்தாலும்  அவரது  குடும்பத்தின்  நிழற்படங்கள்.

இராசம்மா    ஒரு  விடுதலைப்  போராளி,  சமூக  உரிமைகளுக்காகப்  போராடியவர்,   ஆசிரியர்  பணிக்காக    தம்மை    அர்ப்பணித்துக்  கொண்டவர்.

16வயதிலேயே  இந்திய  தேசிய   இராணுவ(ஐஎன்ஏ)த்தின்  மகளிர்  பிரிவான  ஜான்சி  ராணிப்  படையில்  சேர்ந்தார்.  அவரது  சொந்த   ஊரான  ஈப்போவில்  ஐஎன்ஏ  தலைவர்   சுபாஷ்   சந்திர  போஸின்  உரையைக்  கேட்டு    இந்திய  விடுதலைப்  போராட்டத்தில்   குதித்தார்.

ஈராண்டுகள்  அதில்  பணியாற்றிவிட்டுத்    திரும்பியவர்    ஆசிரியர்  பணியில்   சேர்ந்தார். அவரின்  குடுபத்தாரில்  பெரும்பாலோர்   ஆசிரியர்கள்.  அத்துடன்   தொழிற்சங்க  ஈடுபாடு   கொண்டவர்கள். அந்த  வழியில்   ராசம்மா   1960-இல்  ஆசிரியைச்  சங்க(WTU)த்தை   நிறுவினார்.

பல  பள்ளிகளில்    ஆசிரியராக   பணியாற்றியிருக்கிறார். ஈப்போ,  பினாங்கு    மெதடிஸ்ட்  பெண்கள்  பள்ளிகளில்   ஆசிரியர்.  கிள்ளான்   மெதடிஸ்ட்  பெண்கள்   பள்ளி,  கோலாலும்பூர்   மெதடிஸ்ட்   கல்லூரி   நிர்வாகி,  முதல்வர்   என்று   சிறப்பாக  பணியாற்றியுள்ளார்.

மலேசிய  மகளிர்  அமைப்புகளின் தேசிய  மன்றம்,  இளம்  பெண்கள்  கிறிஸ்துவர்  சங்கம்   ஆகியவற்றில்   மிக  தீவிரமாக   ஈடுபட்டார்.  பின்னதில்  இன்னும்  உறுப்பினராக   உள்ளார்.

அவரது  காலத்தில்   ஆசிரியை   WTU   சாதித்ததை  நினைத்து    இப்பவும்   பெருமை  கொள்கிறார். சங்கம்   அமைத்ததிலிருந்து   அது  ஆசிரியைகளுக்குச்    சம ஊதியம்  கோரி   போராட்டம் நடத்தி    வந்தது.   பத்தாண்டுப்  போராட்டத்துக்குப்   பிறகு   1970-இல்தான்   அது  நனவானது.

“சம  ஊதியம்  என்பது   அரசின்   எல்லாத்  துறைகளிலும்   அமல்படுத்தப்பட   வேண்டும்   என்பதில்   உறுதியான   நம்பிக்கை   கொண்டிருந்தோம்”,  என்கிறார்.

அப்போது  நம்  நாட்டின்  சுதந்திரத்   தந்தை   துங்கு    அப்துல்    ரஹ்மான்   பிரதமராக   இருந்ததால்  இது   சாத்தியமாயிற்று    என்று  இராசம்மா   கூறினார்.

“மலேசியாவுக்காவும்  மக்களுக்காவும்   தம்  வாழ்க்கை  அர்ப்பணித்தவர்   அவர்.

“அவரே,  மலேசியப்  பிரதமர்களில்   மிக   சிறந்தவர்”,   என்று   துங்குவின்  நினைவுகளில்   ஆழ்ந்து  விட்டார்.    கண்கள்  கலங்கின.