முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பேங்க் நெகராவின் அன்னிய செலாவணிமீதான அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்தில் சாட்சியமளிக்கவுள்ளார். அவருக்குமுன் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் 23-வது சாட்சியாக சாட்சியம் அளித்தார்.
டயிம், அன்னிய செலாவணி இழப்புப் பற்றித் தெரிந்திருந்தால் பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி வாணிகம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.
முன்னதாக, ஆணையத் தலைவர் முகம்மட் சிடிக் ஹசான், தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தைச்ச் சேர்ந்த பி. கணேசன் மத்திய வங்கியின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டினார்.
“ஒரு சிறிய அதிகாரி தன் பொறுப்பை உணர்ந்து கேள்வி கேட்டிருக்கிறார்..
“நீங்கள் ஓர் அமைச்சர் தெரியாது என்று சொல்வது விந்தையாக உள்ளது” ,என்றார்.
டயிம், தமக்கு “எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்டதை ஏற்கவில்லை. அதற்கு சிடிக், “எல்லாருக்கும் அது தெரிந்திருக்கே”, என்றார்.
டயிம் அன்னிய செலாவணி விவகாரம் தெரிந்திருந்தால் அதைத் தடுத்து நிறுத்தி இருப்பேன் என்றார்.
பேங்க் நெகரா தனித்து இயங்கும் அதிகாரம் கொண்டது என்பதால் அதன் நடவடிக்கைகள் குறித்து தமக்கு அதிகம் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
“எனக்குத் தெரிந்திருந்தால் தடுத்திருப்பேன். இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்”, என்றார்.
அதற்கு ஆர்சிஐ தலைவர் சிடிக், மத்திய வங்கி சுயேச்சையாக செயல்பட்டாலும் சட்டப்படி அது அதற்குப் பொறுப்பான அமைச்சரிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டுமே என்றார்.
“அது அவர்களின் பொறுப்பு என்னுடையது அல்ல”, என்று டயிம் வாதிட்டார்.