பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஞாயிற்றுக்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்வார் என்றும் அதில் சிலாங்கூரில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சிவிலகி அம்னோவில் சேர்வார்கள் என்ற செய்தியும் உள்ளிட்டிருக்கும் என்று கூறப்பட்டது.
அக்கூற்றின்படி, அச்சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவில் சேர்வதன்வழி அது பாஸுடன் இணைந்து சிலாங்கூர் அரசைப் பிடிக்க முடியும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அக்கூற்று உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் சைனல் அபிடின் கிடாம்.
“அதில் பாஸை இணைத்துக்கொண்டதுதான் தப்பு.
“பாஸ் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளது, அது அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக்கொள்ளாது என்று.
“எனவே, பாஸ் அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்புவதாகக் கூறி நேரத்தை வீணாக்குவதை நிறுத்துங்கள்”, என்றவர் வலியுறுத்தியதாக ஹராகா டெய்லி தெரிவித்துள்ளது.
எவரும் பாஸை வளைத்துப்போட முடியாது. அது கட்சியின் ஷுரா மன்றம் எடுக்கும் முடிவின்படிதான் நடந்து கொள்ளும் என்றாரவர்.